ரூ.57 கோடி சிக்கிய நிலையில் பரபரப்பு; பிரதமர் மோடி தொகுதியில் போதை மருந்து கடத்தல்: இதுவரை 38 மருந்து நிறுவனங்கள் மீது வழக்கு

வாரணாசி: உத்தரப் பிரதேசத்தில் போதைக்காகப் பயன்படுத்தப்படும் இருமல் மருந்து கடத்தல் விவகாரத்தில், மேலும் 12 மருந்து நிறுவனங்கள் மீது உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை மையமாக வைத்து ‘கோடின்’ கலந்த இருமல் மருந்துகளைப் போதைக்காகப் பயன்படுத்தும் கும்பல் செயல்பட்டு வருவது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. போலி ஆவணங்கள் மூலம் சுமார் 57 கோடி ரூபாய் மதிப்பிலான 37 லட்சம் இருமல் மருந்து பாட்டில்களைப் பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும், அண்டை நாடுகளுக்கும் கடத்தியது விசாரணையில் தெரியவந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே முக்கிய குற்றவாளியான அமித் சிங் டாடா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், மூளையாகச் செயல்பட்ட சுபம் ஜெய்ஸ்வால் துபாய்க்குத் தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த முறைகேட்டில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் மேலும் 12 மருந்து நிறுவனங்கள் மீது அதிகாரிகள் தற்போது அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். சந்தேகத்திற்குரிய நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியபோது, அவை பதிலளிக்காததுடன், குறிப்பிட்ட முகவரியில் அந்த நிறுவனங்கள் இயங்காததும் சோதனையில் உறுதியானது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘ஏற்கனவே 26 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், தற்போது போலி ஆவணங்கள் மூலம் செயல்பட்ட மேலும் 12 நிறுவனங்கள் சிக்கியுள்ளன; இதன் மூலம் மொத்தம் 38 நிறுவனங்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளனர். வாரணாசி நாடாளுமன்ற ெதாகுதியானது, பிரதமர் மோடியின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: