சேலம் வழியே மின்னல் வேகத்தில் சென்றது ஜோலார்பேட்டை-கோவை மார்க்கத்தில் 145 கி.மீ. வேகத்தில் ரயில் இயக்கி சோதனை

*வெற்றிகரமாக நடந்ததாக அதிகாரிகள் அறிவிப்பு

சேலம் : ஜோலார்பேட்டை-கோவை மார்க்கத்தில் 145 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை செய்தனர். இந்த அதிவேக சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்ததாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். சென்னை-கோவை மார்க்கத்தில் 130 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்க தண்டவாள கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதில், முதல்கட்டமாக சென்னை-ஜோலார்பேட்டை இடையே 130 கி.மீ. வேகத்திற்கான தண்டவாள மேம்பாட்டு பணிகளை முடித்து, அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

2ம் கட்டமாக ஜோலார்பேட்டை-கோவை இடையே 286 கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்டவாளத்தை மேம்படுத்தும் பணி கடந்த 2 ஆண்டுகளாக நடந்தது. அப்பணி தற்போது நிறைவடைந்ததையடுத்து, அதிவேக ரயில் சோதனை ஓட்டத்தை தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.

இந்தவகையில் கடந்த 15ம் தேதி கோவை-ஜோலார்பேட்டை இடையே அதிவேக ரயிலை இயக்கி சோதித்தனர். அப்போது அதிகப்பட்சமாக 140 கி.மீ., வேகத்தில் ரயில் இயக்கி பார்க்கப்பட்டது. இதன் அடுத்தக்கட்டமாக ஜோலார்பேட்டை-கோவை இடையே நேற்று அதிவேக ரயில் சோதனை ஓட்டத்தை தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடத்தினர்.

இதற்கான சிறப்பு ரயில் (இன்ஜினுடன் 2பெட்டிகள்), சென்னை சென்ட்ரலில் இருந்து ஜோலார்பேட்டைக்கு வந்தது. பிறகு முற்பகலில் ஜோலார்பேட்டையில் இருந்து திருப்பத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் வழியே கோவைக்கு அதிவேகமாக இயக்கி பார்க்கப்பட்டது.

பிற்பகலில் கோவையில் இருந்து ஜோலார்பேட்டைக்கு இயக்கி பார்த்தனர். இந்த அதிவேக சோதனை ஓட்டத்தில் மிக அதிகப்பட்சமாக 145 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கினர். அந்த வேகத்தில் செல்லும்போது, தண்டவாளத்தின் ஸ்திரத்தன்மை பரிசோதிக்கப்பட்டது.

வளைவுகளில் திரும்பும் வேகம், யார்டு, பாயிண்ட் பகுதியில் செல்லும் வேக திறன் போன்ற அனைத்து அசைவுகளையும் பதிவு செய்துகொண்டனர். இந்த அதிவேக சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்ததாகவும், அதுவும் 145 கி.மீ., வேகத்தில் ரயிலை இயக்கி பார்த்து தண்டவாள திறன் சோதிக்கப்பட்டதாகவும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் அறிவித்தனர்.

இச்சோதனை ஓட்டம் மூலம் இனிமேல் சென்னை சென்ட்ரல்-கோவை மார்க்கத்தில் 130 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் சோதனைக்கு பிறகு உரிய அனுமதி பெறப்பட்டு, 130 கி.மீ., வேகத்தில் ரயில்கள் இயக்கம் நடைமுறைக்கு வரும்.

இதன்மூலம் விரைந்த போக்குவரத்தை பயணிகள் பெறுவார்கள். அதுவும் தமிழ்நாட்டின் முக்கிய வழித்தடங்களின் ஒன்றான சென்னை-கோவை வழித்தடம் மேம்பாடு பெற்றிருப்பது ரயில் பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: