கரூர், நவ. 27: சிறுபான்மையினர் நல சிறப்புக் குழு ஆய்வுக் கூட்டதில் ரூ.8.18 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாநில சிறுபான்மையினர் நல சிறப்புக் குழு ஆய்வுக் கூட்டம் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமை வகித்தார். மாநில சிறுபான்மையினர் நல சிறப்புக் குழு உறுப்பினர் இனிக்கோ இருதயராஜ் முன்னிலை வகித்தார்.
மாநில சிறுபான்மையினர் நல சிறப்புக் குழு உறுப்பினர் இனிக்கோ இருதயராஜ் பேசியதாவது; தமிழ்நாடு முதலமைச்சர் மநில சிறுபான்மையினர் நல சிறப்பு குழுவை அமைத்து ஒவ்வொரு மாவட்டமும் சென்று அங்கிருக்கக்கூடிய பணிகள் எல்லாம் எப்படி நடக்கிறது என்பதை ஆய்வு செய்ய உத்தரவிட்டதின் காரணமாக சிறுபான்மையின மக்களுக்கு அரசின் திட்டங்கள் அனைத்தும் சென்று சேர்ந்ததை உறுதி செய்திடும் வகையில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. சிறுபான்மையினர் மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.சிறுபான்மையின மக்களுக்கு கல்லறைத் தோட்டம் மற்றும் கபர்ஸ்தான் வேண்டும் என்ற கோரிக்கைவைத்தோம். தமிழ்நாடு முழுவதும் 2001-லிருந்து கல்லறைத் தோட்டங்களோ, கபர்ஸ்தான்களோ அரசு ஒதுக்கவில்லை என்கின்ற அந்தத் தகவலை முதலமைச்சர் கவனத்திற்குக் கொண்டு சென்றபோது அவர் உடனடியாக அலுவலர்களுடன் ஒரு கூட்டம் நடத்தி கடந்த வருடம் அதற்கான அரசாணையை வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் மாவட்ட தலைநகரங்களிலே கல்லறைத் தோட்டங்கள் உடனடியாக அமைத்துத் தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசாணை வெளியிட்டது மட்டுமல்லாமல், எங்கெல்லாம் புறம்போக்கு நிலங்கள் இல்லையோ, அரசு நிலங்கள் இல்லையோ ஆனால் கல்லறை தேவைப்படுகிறது என்று சொன்னால் நீங்கள் தனியார் நிலங்களைக்கூட வாங்கி அதிலே கல்லறைத் தோட்டமாக உருவாக்கித் தாருங்கள். அதற்காக ரூ.₹ 10.00 கோடி நிதியையும் நமக்குத் தந்தவர் நம்முடைய தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் .இந்த ஆய்வு கூட்டத்தைப் பொருத்தவரை கரூர் 19-வது மாவட்டம். இதில் 11 மாவட்டங்களில் ஆய்வுக்கு சென்ற போது கல்லறைத் தோட்டங்கள் இல்லை என்ற நிலை இருந்தது. ஏற்கனவே நம்முடைய தலைமைச் செயலாளர், அனைத்து அரசுத்துறை செயலாளர்கள் மற்றும் அரசு அலுவலர்களுடனும் கலந்து ஆலோசித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கல்லறைத் தோட்டங்களை உருவாக்கித்தரவேண்டும் என்று அறிவுறுத்திவுள்ளார்.அதனடிப்படையில் 11 மாவட்டங்களில் நேரில் சென்று கள ஆய்வு செய்யும் பொழுது, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2ம் தேதி கிறிஸ்தவர்களுடைய கல்லறைத் திருநாள். ஆனால் நவம்பர் 1-ம் தேதியே 11 மாவட்டங்களுக்கான கல்லறைகள் மற்றும் கபர்ஸ்தானுக்கான ஆணையை தமிழ்நாட்டு முதலமைச்சர வழங்கியுள்ளார்கள்.
அது மட்டுமல்லாமல் தமிழ்நாடு முதலமைச்சர் சுமார் 200 முதல் 300 வருடங்கள் பழமை வாய்ந்த தேவாலயங்களை புனரமைப்பு செய்வதற்காக, கோரிக்கை வைக்காமலேயே கிறிஸ்தவ அறக்கட்டளைகளுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருவது தடுத்து நிறுத்தப்படுகிறது என்பதை அறிந்து, தமிழ்நாடு அரசின் சார்பாக வருடத்திற்கு ₹.10.00 கோடி நிதி ஒதுக்கி இன்றைக்குப் பல்வேறு தேவாலயங்கள் புனரமைக்கப்பட்டு வருகிறதென மாநில சிறுபான்மையினர் நல சிறப்புக் குழு உறுப்பினர்/திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிக்கோ இருதயராஜ் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பாக கரூர் மாவட்ட கிறித்துவ மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் 37 பயனாளிகளுக்கு ரூ.7.40லட்சம் மதிப்பீட்டில் சிறுதொழில் கடனுதவிகளும் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் 13 பயனாளிகளுக்கு ரூ.78,000 மதிப்பீட்டிலான தையல் பயிற்சி பெற்ற சிறுபான்மையின மக்களுக்கு மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்களையும் என மொத்தம் 50 பயனாளிகளுக்கு ரூ. 8.18 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாநில சிறுபான்மையினர் நல சிறப்புக் குழு உறுப்பினர், திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிக்கோ இருதயராஜ் வழங்கினார்.இதில், சட்டமன்ற உறுப்பினர்கள்.இளங்கோ, சிவகாமசுந்தரி, குளித்தலை சார் ஆட்சியர் சுவாதி , மாநில சிறுபான்மையினர் நல சிறப்புக் குழு உறுப்பினர் இமானுவேல், துணை மேயர் சரவணன், மண்டலக்குழு தலைவர்கள் கனகராஜ், ராஜா, பள்ளபட்டி நகர்மன்ற தலைவர் முனவர் ஜான், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் (பொ) சக்திபாலகங்காதரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
