தமிழகத்தில் கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயார் நிலையில் பேரிடர் மீட்பு படை: அமைச்சர் தகவல்

சென்னை: சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கையின் தெற்கு பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. இதனால் டெல்டா, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த பேரிடரை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகத்தினர் தயார் நிலையில் இருக்குமாறு அரசு உயர் அலுவலர்களுக்கும் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கும் பேரிடரை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய ஆயத்த நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய பேரிடர் மீட்பு படையின் ஒரு அணி திருநெல்வேலி மாவட்டத்திலும், ஒரு அணி இன்று முதல் விழுப்புரம் மாவட்டத்திலும், ஒரு அணி சென்னை மாவட்டத்திலும் முன்கூட்டியே நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். கூடுதலாக ஐந்து அணியினர் அரக்கோணத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கூறினார்.

ஆய்வின்போது வருவாய் நிர்வாக ஆணையர் சாய்குமார், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அமுதா உள்ளிட்ட உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: