அரசியலமைப்பு மீதான பாஜவின் பாசம் வெறும் பாசாங்குத்தனம்: காங்கிரஸ் கடும் தாக்கு

புதுடெல்லி: ‘அரசியலமைப்பு மீதான பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் காட்டும் மரியாதையும், பாசமும் வெறும் பாசாங்குதனம். போலியானவை’ என காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் உள்ள மாநில மற்றும் மாவட்டத் தலைமையகங்களில் ‘அரசியல் சாசன பாதுகாப்பு தினம்’ (சம்விதான் பச்சாவ் திவாஸ்) நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. தேர்தல் முறைகேடுகள் மற்றும் ஜனநாயக அமைப்புகள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து காங்கிரஸ் இந்த முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது.

இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று தனது எக்ஸ் பதிவில், ‘‘இந்தியாவின் அடையாளங்களாக இருக்கும் நீதி, சமத்துவம், சுதந்திரம், பரஸ்பர சகோதரத்துவம் மற்றும் மதச்சார்பின்மை ஆகியவை இன்று பாஜ ஆட்சியில் ஆபத்தில் உள்ளன. காலனித்துவத்தின் ஆபத்துகள் குறித்து பிரதமர் மோடி நமக்கு போதிக்கிறார். ஆனால் சுதந்திர போராட்டத்திலும் தேசிய இயக்கத்திலும் நாட்டு மக்களுடன் ஒருநிமிடம் கூட நிற்காமல் பிரிட்டிஷ் அடிமைத்தனத்திற்கு சேவை செய்த சித்தாந்ததை கொண்டவர்கள் இவர்கள். அரசியலமைப்பு நிறுவனங்களை யார் நாசம் செய்கிறார்கள் என்பதை நாட்டு மக்கள் நன்கறிவார்கள். அரசியலமைப்பு மீதான பாஜ-ஆர்எஸ்எஸ்சின் மரியாதை வெறும் பாசாங்கு. போலித்தனம். அவர்கள் அரசிலமைப்பை அவமதிப்பதில் தீவிரமாக உள்ளனர். அரசியலமைப்பின் நகல்களை எரித்தவர்கள் அவர்கள். ஒரு காலத்தில் அரசியலமைப்பை விட மனுஸ்மிருதியை உயர்வாக கருதியவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் தேவைக்காக அரசியலமைப்பு தங்களுடையது என்று கூற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்’’ என்றார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘இந்திய அரசியல் சாசனம் என்பது வெறும் புத்தகம் அல்ல; அது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அளிக்கப்பட்ட புனிதமான வாக்குறுதி ஆகும். மதம், ஜாதி, மொழி, பிராந்தியம், ஏழை அல்லது பணக்காரர் என எந்த வேறுபாடும் இன்றி அனைவருக்கும் சமத்துவம், மரியாதை மற்றும் நீதியை இது உறுதி செய்கிறது. ஏழை எளிய மக்களின் உரிமைகளைக் காக்கும் பாதுகாப்பு கேடயமாகவும், அவர்களின் குரலாகவும் திகழ்கிறது. அரசியல் சாசனம் பாதுகாப்பாக இருக்கும் வரை ஒவ்வொரு இந்தியரின் உரிமைகளும் பாதுகாப்பாக இருக்கும். அதன் மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலையும் அனுமதிக்க மாட்டோம் என்றும், அதைக் காக்க முன்னின்று போராடுவேன் என்றும் உறுதி ஏற்போம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: