8 வருட விசாரணைக்கு பின் நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: நடிகர் திலீப் உள்பட 9 பேர் ஆஜராக உத்தரவு

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் முன்னணி நடிகை ஒருவர் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி இரவில் ஒரு படப்பிடிப்புக்காக திருச்சூரிலிருந்து கொச்சிக்கு காரில் செல்லும் வழியில் 6 பேர் கொண்ட கும்பலால் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது பலாத்கார காட்சிகளை அந்தக் கும்பல் செல்போனில் வீடியோ எடுத்தது. இதன் பின்னர் நடிகையை வழியில் இறக்கிவிட்டு அந்தக் கும்பல் தப்பிச் சென்றது.

இதுகுறித்து அந்த நடிகை கொச்சி போலீசில் புகார் செய்தார். நெடும்பாசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். ஒரு சில நாட்களிலேயே இந்த வழக்கில் முக்கிய நபரான பல்சர் சுனில்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் நடிகையிடம் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். ஏற்கனவே இந்த வழக்கு குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து இந்த வழக்கில் மார்ட்டின் ஆண்டனி, மணிகண்டன், விஜீஷ், பிரதீப், சலீம், சார்லி தாமஸ், சனில்குமார் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பலாத்காரத்திற்கு பிரபல மலையாள முன்னணி நடிகர் திலீப் தான் சதித்திட்டம் தீட்டினார் என தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி திலீப்பையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 85 நாள் சிறைவாசத்திற்கு பின்னர் இவர் ஜாமீனில் வெளியே வந்தார். கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த வழக்கில் விசாரணை தொடங்கியது. அந்த வருடமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. முதலில் ஆலுவா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்த விசாரணை பின்னர் எர்ணாகுளம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் மொத்தம் 216 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். முதலில் நடிகைக்கு ஆதரவாக சாட்சியம் அளித்த பல நடிகர், நடிகைகள் பின்னர் பல்டி அடித்தனர். இந்த வழக்கு விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹனி எம். வர்கீஸ் நேற்று அறிவித்தார். அன்று நடிகர் திலீப் உள்பட 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சம்பவம் நடந்து 8 வருடங்களும், 9 மாதங்களும் கடந்த பின்னர் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Stories: