முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட நிலையில் அயோத்தி ராமர் கோயிலில் கொடியேற்றினார் பிரதமர் மோடி: பல நூற்றாண்டு கால காயமும், வலியும் குணமடைவதாக பேச்சு

அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டதை குறிக்கும் வகையில், கோயிலின் கோபுர உச்சியில் பிரதமர் மோடி கொடியேற்றி வைத்தார். இதன் மூலம் பல நூற்றாண்டு கால காயமும், வலியும் குணமடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயிலில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை குறிக்கும் வகையில் கோயில் கோபுரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், பிரதமர் மோடி, உபி ஆளுநர் ஆனந்தி பென் படேல், மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். குழந்தை ராமரை வணங்கி பூஜை செய்த பிரதமர் மோடி, ராமர் கோயிலின் பிரதான கோபுரத்தின் (161 அடி உயரம்) உச்சியில் 30 அடி உயர கம்பத்தில் காவி கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது: இன்று முழு தேசமும் உலகமும் ராமரில் மூழ்கியுள்ளன. பல நூற்றாண்டு கால காயங்கள் குணமாகி வருகின்றன. பல நூற்றாண்டு கால வலி முடிவுக்கு வருகிறது. ஏனெனில் 500 ஆண்டுகளாக பற்றி எரிந்து கொண்டிருந்த விஷயம் இன்று இறுதியாக நிறைவேறி இருக்கிறது. இந்த கொடியேற்றம் தனித்துவமான, தெய்வீக தருணம். ராமர் கோயிலின் மேல் ஏற்பட்டுள்ள இந்த புனிதக் கொடி, ‘உண்மை இறுதியில் பொய்யை வெல்லும்’ என்பதற்கு சான்றாக நிற்கும். இந்த தருணத்தில் ராம பக்தர்கள், கோயில் கட்டுமானத்திற்கு பங்களித்த அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.

அயோத்தி எப்போதும் லட்சியங்களை நிறைவேற்றும் பூமியாக இருந்துள்ளது. இங்கிருந்து ராமர் இளவரசராக வெளியேறினார். ஆனால் மரியாதைக்குரிய நபர்களில் சிறந்தவராக திரும்பி வந்தார். முனிவர்களின் ஞானம், நல்ல வழிகாட்டுதல், நிஷாத் ராஜின் நட்பு, சபரியின் பக்தி மற்றும் எண்ணற்ற மற்றவர்களின் அர்ப்பணிப்பு ஆகியவை அவரை வடிவமைத்தன. வளர்ந்த இந்தியாவிற்கும் இதே கூட்டு வலிமை தேவைப்படும். இந்தியா நிகழ்காலத்தைத் தாண்டி எதிர்கால சந்ததியினருக்காகத் திட்டமிட வேண்டும். இன்றைய தினத்தை மட்டும் நினைப்பவர்கள் வருங்கால சந்ததியினருக்கு அநீதி இழைக்கிறார்கள். நாம் பிறப்பதற்கு முன்பே நாடு இருந்தது, நாம் இங்கே இல்லாதபோதும் அது அப்படியே இருக்கும். 2047ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை நோக்கிய பயணத்திற்கு, நமக்குள் ராமரை எழுப்ப வேண்டும். ராமர் ஒரு நபர் அல்ல, ஒரு மதிப்பு, ஒழுக்கம், பாதை.

சுதந்திரம் அடைந்த 70 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா உலகின் 11து பெரிய பொருளாதாரமாக இருந்தது. ஆனால் கடந்த 11 ஆண்டுகளில், நாம் 5வது பெரிய நாடாக மாறிவிட்டோம். நாம் 3வது பெரிய நாடாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை. ராவணனுக்கு எதிரான போரில் ராமருக்கு கிடைத்த தேரைப் போல, இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்கும் பொறுமை, உண்மை, நல்ல நடத்தை, வலிமை மற்றும் இரக்கம் தேவை. ராம ராஜ்ஜியத்தின் தொலைநோக்குப் பார்வை இந்தியாவின் எதிர்காலத்தை வழிநடத்த வேண்டும். சுயநலத்தை விட தேசிய நலன் முக்கியத்துவம் பெற்று, உயர்ந்ததாக இருக்கும்போது மட்டுமே இது சாத்தியமாகும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

தமிழ்நாட்டை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி
பிரதமர் மோடி பேசுகையில், ‘‘இந்தியா அதன் நாகரிக அடையாளத்தில் பெருமை கொள்ள வேண்டும். 190 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவை அதன் வேர்களிலிருந்து வேரோடு பிடுங்குவதற்கான விதைகளை மெக்காலே விதைத்தார். நாம் சுதந்திரம் பெற்றோம், ஆனால் தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுதலை பெறவில்லை. அடுத்த 10 ஆண்டுகள் இந்த மனநிலையை மாற்றியமைக்க நம்மை அர்ப்பணிக்க வேண்டும். காலனித்துவ கால சிதைவுகள் இந்தியா வெளிநாட்டிலிருந்து ஜனநாயகத்தை கடன் வாங்கியது என்ற நம்பிக்கைக்கு வழிவகுத்தன. இந்தியா தான் ஜனநாயகத்தின் தாய். அது நமது டிஎன்ஏவில் உள்ளது. ஜனநாயக நடைமுறைகளை ஆவணப்படுத்தும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் பல தமிழ்நாட்டில் உள்ளன’’ என்றார்.

Related Stories: