எஸ்ஐஆருக்கு ஆதரவாக வழக்குப் போட்டது ஏன்? எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி

ஓமலூர்: எஸ்ஐஆருக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டது ஏன் என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் இருந்து சேலத்திற்கு நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வந்தார். சேலம் விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: கடந்த 18ம் தேதி கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் அளித்த பேட்டியில், மேகதாது அணை கட்டும் பணி முழுவீச்சில் தொடங்கப்படும். முழு விரிவான திட்ட அறிக்கை நீர்வள ஆணையத்திடம் வழங்கப்படும்.

மேகதாது அணைத் திட்டத்திற்காக தனி அலுவலகம் அமைக்கப்படும் என முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். தமிழகத்தில் ஜீவநதியாக இருப்பது காவிரி நதி. அந்த நதிநீரை நம்பித்தான் பல லட்சம் விவசாயிகள் வேளாண்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 20 மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக காவிரிதான் இருக்கிறது.

அப்படிப்பட்ட நிலையில் இன்றைக்கு கர்நாடக அரசு இப்படி ஒரு திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் சமர்ப்பிப்போம் என்று தெரிவித்துள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. 2025ல் மக்கள் தொகை எவ்வளவு உள்ளது என்பதை கணக்கிட்டு அனுப்ப வேண்டும்.

குளறுபடி இன்றி ஒன்றிய அரசின் விதிகளுக்குட்பட்டு அறிக்கையை அனுப்ப வேண்டும். மதுரை மாநகராட்சியிலும் இதே நிலைதான். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இரண்டு மெட்ரோ ரயில் திட்டங்களும் நிறைவேற்றப்படும். நிரந்தர டிஜிபி இதுவரை நியமிக்கப்படவில்லை. இனியும் கால தாமதம் செய்யாமல் உடனடியாக டிஜிபியை நியமனம் செய்து, சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

எஸ்.ஐ.ஆர் குறித்து அதிமுக சார்பில் ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது ஏன் என்று நிருபர்கள் கேட்டதற்கு, எஸ்.ஐ.ஆர். பணி 21 ஆண்டு காலம் நடைபெறவில்லை. இதனால் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படவில்லை. இரட்டை வாக்காளர்கள் தொடர்ந்து இடம் பெற்றுள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதியில் 44 ஆயிரம் வாக்குகள் முறைகேடாக இடம் பெற்றிருப்பதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்.

அதனடிப்படையில் 30 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். நீதிமன்றத்தை நாடி கரூரில் 10 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். தி.நகரில் பல்லாயிரக்கணக்கான வாக்காளர்கள் முறைகேடாக இடம் பெற்றுள்ளனர். இதுதொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர் பணி தொடங்க இருப்பதாக தெரிவித்தனர். தாம்பரம் தொகுதியில் 360 வாக்குகள் ஒரே வீட்டில் இடம்பெற்றுள்ளது.

மற்றொரு பகுதியில் 150 வாக்குகள் இடம்பெற்றுள்ளது. இதையெல்லாம் களைய வேண்டும். உண்மையிலேயே நேர்மையான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்பதற்காகத்தான் எஸ்.ஐ.ஆர் பணி நடைபெற்று வருகிறது. அதனால், எஸ்.ஐ.ஆர் பணியை நாங்கள் ஆதரிக்கிறோம்.

தேர்தல் ஆணையம் விழிப்போடு இருந்து எஸ்.ஐ.ஆர் பணி முறையாக நடப்பதை உறுதி செய்ய வேண்டும். தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்படி மாவட்ட ஆட்சியர்கள் முறையாக செயல்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். எஸ்.ஐ.ஆருக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்து உள்ளதை எதிர்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், எடப்பாடி விளக்கமளித்து உள்ளார்.

* நெல் ஈரப்பதம் விவகாரம் மழுப்பலான பதில்
நெல் ஈரப்பதம் உயர்த்தி கொள்முதல் செய்ய, உங்கள் கோரிக்கை உட்பட அரசியல் கட்சி தலைவர் கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளதே என்ற கேள்விக்கு, ‘எனக்கு முழுமையான விவரம் தெரியவில்லை. தெரிந்தவுடன் பதில் சொல்கிறேன். எங்களைப் பொறுத்தவரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தி உள்ளேன். விவசாயிகள் வாழ்வாதாரம் என்பதால் ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று கேட்டுக்கொள்கிறேன்.

* பட்டியலின எம்எல்ஏ தரையில் அமர வைக்கப்பட்டதால் சர்ச்சை
எஸ்ஐஆர் குறித்த அரூர் ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் பசுபதி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது பட்டியலினத்தை சேர்ந்த அரூர் எம்.எல்.ஏ. சம்பத்குமார் தரையில் அமர வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது குறித்த கேள்விக்கு, ‘அதிமுக ஜாதிக்கு அப்பாற்பட்ட கட்சி. பட்டியலின மக்களுக்கு அதிமுக எப்போதும் உயர்வான இடத்தை வழங்கி வருகிறது’ என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Related Stories: