கோவை மாணவி கூட்டு பாலியல் வழக்கில் கைதான 3 வாலிபர்களுக்கு டிஎன்ஏ, ஆண்மை பரிசோதனை: சென்னை தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது

கோவை: கோவை பீளமேடு சர்வதேச விமான நிலையம் பின்புறம் கடந்த 2ம் தேதி இரவு மதுரையை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி 3 வாலிபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் சகோதரர்களான சதீஷ் (எ) கருப்பசாமி (30), காளி (எ) காளீஸ்வரன் (21), உறவினரான குணா (எ) தவசி (20) ஆகியோர் போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த 18ம் தேதி கோவை மத்திய சிறையில் நீதிபதி தமிழ் இனியன் முன்னிலையில் கைதான 3 பேருடன் மேலும் சிலரை வரிசையில் நிற்க வைத்து அணிவகுப்பு நடத்தப்பட்டது. அப்போது, கைதான 3 பேரையும் மாணவி அடையாளம் காட்டினார். இதைதொடர்ந்து நேற்று முன்தினம் கோவை அரசு மருத்துவமனையில் கைதான 3 பேருக்கும் தடயவியல் துறையினர் டிஎன்ஏ மற்றும் ஆண்மை பரிசோதனை செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘3 பேருக்கும் டிஎன்ஏ மற்றும் ஆண்மை பரிசோதனை செய்ய கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில், அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த மாதிரிகள் சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் துறை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு வாரத்தில் அதன் ரிசல்ட் கிடைத்துவிடும். இது இந்த வழக்கு விசாரணையில், முக்கிய ஆதாரமாக கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும்’’ என்றனர். இந்த வழக்கில் ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதற்கான பணிகளில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Related Stories: