சென்னை: தாம்பரத்தை சேர்ந்த வழக்கறிஞர் லட்சுமி ராஜா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், மாதவிடாய் காலங்களில், பெண்கள் சுகாதாரத்தைப் பேணுவது மிகவும் முக்கியமானது. இந்த காலத்தில் அவர்கள் பயன்படுத்து சானிட்டரி நாப்கின்களின் விலை அதிகமாக உள்ளது. இதை வாங்க முடியாத ஏழை பெண்களும், நாப்கின்கள் கிடைக்காததால் கிராமப்புற பெண்களும், சுகாதார குறைவான மாற்று நடைமுறைகளை பின்பற்றி வருகின்றனர். பள்ளிகளில் இலவசமாக நாப்கின்கள் வழங்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதில் இருந்து, அதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள முடியும்.
இதையடுத்து, ரேஷன் கடைகளில் சானிட்டரி நாப்கின்களை இலவசமாகவோ, மானிய விலையிலோ வழங்கும் திட்டம் தமிழகத்தில் உள்ளதா என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட துறையிடம் ேகட்டபோது, அப்படி எந்த திட்டமும் இல்லை என்று பதில் தரப்பட்டுள்ளது. எனவே, ஏழை மற்றும் கிராமப்புற பெண்கள் பயன் அடையும் வகையில், ரேஷன் கடைகளில், மானிய விலையிலோ அல்லது இலவசமாகவோ சானிட்டரி நாப்கின்களை வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று அரசு தரப்பில் கோரப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதிகள், ஏற்கனவே இறுதி அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், பதில் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, டிசம்பர் 16ம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால், சமூக நலத் துறை, உணவுப்பொருள் வழங்கல் துறை மற்றும் சுகாதாரத் துறை செயலாளர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.
