சவுதி அரேபியாவில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

ரியாத் : சவுதி அரேபியாவில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர். சவுதி அரேபியாவின் மதீனா அருகே பேருந்து – டீசல் லாரி மோதி விபத்துக்குள்ளானது. மெக்காவில் இருந்து மதீனாவிற்கு உம்ரா புனித பயணிகள் சென்ற போது விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த கோர விபத்தில் பேருந்து தீப்பற்றியது. இதில் பேருந்தில் பயணித்த இந்தியர்கள் 42 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இதில், ஐதராபாத்தை சேர்ந்த 20 பெண்கள், 11 குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளது. மற்ற உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “மதீனாவில் இந்தியர்கள் விபத்தில் சிக்கியதால் மிகுந்த வருத்தம் அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருடன் என் எண்ணங்கள் உள்ளன. காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். ரியாத்தில் உள்ள எங்கள் தூதரகம் மற்றும் ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகம் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றன. எங்கள் அதிகாரிகள் சவுதி அரேபிய அதிகாரிகளுடனும் நெருங்கிய தொடர்பில் உள்ளனர்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல், முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், ” மதீனா அருகே நடந்த துயரமான பேருந்து விபத்தில் பல இந்திய யாத்ரீகர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் முழு மருத்துவ சிகிச்சை பெற்று விரைவில் குணமடைவர் என்று நம்புகிறேன்,” என கூறியுள்ளார்.

Related Stories: