×

விதிகள் மீறப்பட்டால் விடுதலை கைதுக்கான காரணத்தை எழுத்து மூலம் அளிப்பது கட்டாயம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்ற அரசியலமைப்பின் பாதுகாப்புகளை பின்பற்றாததன் அடிப்படையில் கைது செய்வதன் சட்டபூர்வ தன்மையை எதிர்த்து மிஷிர் ராஜேஷ் ஷா என்பவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் ஆகியோர் அமர்வு வழங்கிய தீர்ப்பில்,\” கைதுக்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 22(1) வழங்கும் பாதுகாப்பு என்பது ஏதோ ஒரு நடைமுறை சம்பிரதாயம் கிடையாது. அது தனிநபர் சுதந்திரத்தின் அடிப்படை உரிமை ஆகும்.

மேலும், கைதுக்கான காரணங்களை சம்பந்தப்பட்ட நபருக்கு வெறும் வாய்மொழியாகச் சொல்வது போதுமானது இல்லை. அவர் எளிதில் புரிந்துகொள்ளும் மொழியில் எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட வேண்டும். அப்போது தான் அவர் சட்ட உதவியை நாடவோ அல்லது ஜாமீன் கேட்கவோ முடியும். இந்திய தண்டனைச் சட்டம் ( தற்போது பாரதிய நியாய சன்ஹிதா ) முதல் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (யு.ஏ.பி.ஏ) வரையிலான அனைத்து சட்டங்களுக்கும் இந்த விதிமுறை என்பது பொருந்தக் கூடியதாகும். இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறினால், அந்த கைது நடவடிக்கை என்பது சட்டவிரோதமாகக் கருதப்பட்டு, கைது செய்யப்பட்டவர் உடனடியாக விடுதலை செய்யப்படுவார்.

மேலும் இந்த தீர்ப்பின் நகலை அனைத்து உயர்நீதிமன்றங்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பி வைத்து, நாடு முழுவதும் ஒரே மாதிரியாக நடைமுறை கொண்டு வர வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பின் மூலம் அனைத்து சட்டங்களின் கீழான கைது நடவடிக்கைகளுக்கும் இந்த விதியைக் கட்டாயமாக்கி உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது, தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் புதிய மைல்கல் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவிதுள்ளனர்.

Tags : Supreme Court ,New Delhi ,Mishir Rajesh Shah ,Supreme Court… ,
× RELATED விமான சேவைகள் டிச.10ம் தேதிக்குள் முழுமையாக சரியாகும்: இண்டிகோ நிறுவனம்!