மனைவியின் மதம் குறித்து வாய் கொடுத்து மாட்டிக்கொண்ட அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்

நியூயார்க்: அமெரிக்காவின் துணை அதிபர் ஜேடி வான்ஸின் மனைவி இந்தியா வம்சாவளியை சேர்ந்த உஷா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். துணை அதிபர் ஜே.டி,வான்ஸ் அங்குள்ள மிசிசிப்பி பல்கலைக்கழகத்தில் அரசியல் ஆர்வலர் சார்லி கிர்க் நினைவு கூட்டத்தில் பேசும் போது,’ நான் கிறிஸ்தவ நற்செய்தியை நம்புகிறேன்/ இறுதியில் என் மனைவியும் அதைப் போலவே கிறிஸ்தவத்தை தழுவுவார் என்று நம்புகிறேன்.

இருப்பினும் அவரது மத நம்பிக்கையில் நான் தலையிடவில்லை. அவர் தற்போது இந்துவாகத்தான் இருக்கிறார். நாங்கள் எங்கள் குழந்தைகளை கிறிஸ்தவர்களாக வளர்க்க முடிவு செய்தோம். அவர் மதம் மாறவில்லை என்றாலும் அனைவருக்கும் தங்கள் விருப்பத்திற்கு தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருப்பதாக கடவுள் கூறுகிறார். அதனால் அது எனக்கு ஒரு பிரச்சனையையும் ஏற்படுத்தாது. கிறிஸ்தவ விழுமியங்கள் இந்த நாட்டின் முக்கியமான அடித்தளம் என்று சொல்ல தயங்க மாட்டேன்.

தங்கள் கருத்தை நடுநிலையாகக் கூறும் எவருக்கும் உங்களை விற்க ஒரு திட்டம் இருக்கலாம். இந்த நாட்டின் கிறிஸ்தவ அடித்தளம் ஒரு நல்ல விஷயம் என்று நான் நினைக்கிறேன்’ என்றார். அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் அளித்த விளக்கத்தில்,’ எனது மனைவி கிறிஸ்தவர் கிடையாது. அவர் இந்து குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். என் மனைவி எனக்கு கிடைத்த மிக அற்புதமான ஆசிர்வாதம்.

பல ஆண்டுகளுக்கு முன் என் நம்பிக்கையில் மீண்டும் ஈடுபடுவதற்கு அவரே என்னை ஊக்குவித்தார். நான் கிறிஸ்தவத்தால் ஈர்க்கப்பட்டது போல என் மனைவியும் ஈர்க்கப்படுவார் என்று நான் நம்புகிறேன். ஆனால் அவருக்கு மதம் மாறுவதற்கான எந்த திட்டமும் இல்லை’ என்றார். இதுதொடர்பாக இந்து அமெரிக்க அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில், ‘உங்கள் மனைவி உங்கள் நம்பிக்கையில் ஈடுபடுவதற்கு உங்களை ஊக்குவித்து இருந்தால் அதற்கு பிரதிபலனாக நீங்கள் ஏன் இந்து மதத்திலும் ஈடுபடக்கூடாது? ” என்று குறிப்பிட்டுள்ளது.

Related Stories: