கொடைக்கானல்- பழநி மலைச்சாலையில் பராமரிப்பு பணிகள் படு மந்தம் விபத்தில் சிக்கும் வாகனங்கள் சுற்றுலா பயணிகள் அவதி

கொடைக்கானல், ஜன. 1: கொடைக்கானல்- பழநி மலைச்சாலையில் பராமரிப்பு பணிகள் படுமந்தமாக நடந்து வருவதால் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருவதாக சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.  

உலகபிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகை இருக்கும். கடந்த 2019ம் ஆண்டு சுமார் 50 லட்சம் சுற்றுலா பயணிகள் வரை  கொடைக்கானலுக்கு வருகை தந்துள்ளனர் என புள்ளிவிபரம் கூறுகிறது. ஆனால் 2020 ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்திருந்தாலும் தற்போது மெல்ல அதிகரிக்க துவங்கியுள்ளது.  இவர்கள் வர வத்தலக்குண்டு- கொடைக்கானல், பழநி- கொடைக்கானல் மலைச்சாலைகளே பிரதானமாக உள்ளது. இதுபோக தாண்டிக்குடி- பெரும்பாறை வழியாகவும் வரலாம். இந்த 3 சாலைகளும் பெருமாள் மலையில் சந்தித்தே கொடைக்கானல் செல்கின்றன. மேலும் பெரியகுளம்- அடுக்கம்- கொடைக்கானல் பாதையும் தயாரானாலும் முழுமையாக பயன்பாட்டிற்கு வரவில்லை.

இதில் வத்தலக்குண்டு, பழநி சாலைகள் நெடுஞ்சாலைத்துறை சார்பாகவும், கொடைக்கானல் நகர் பகுதியில் உள்ள சாலைகள் நகராட்சி சார்பாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறது. கொடைக்கானலுக்கு வரும் மலைச்சாலைகளில் மழை காலங்களில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு, பாறை உருண்டு விழுதல், ராட்சத மரங்கள் சாய்ந்து விழுதல் உள்ளிட்டவைகளால் போக்குவரத்து பாதிக்கப்படும்.  ஆனால் இதற்கு நிரந்தர தீர்வு இதுவரை எட்டப்படாததால் மழைக்காலங்களில் கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் அவதிக்குள்ளாவது தொடர்கதையாக உள்ளது. தற்போது கூட ரூ.45 கோடிக்கு மேல் பராமரிப்பு பணிக்காக கொடைக்கானல் நெடுஞ்சாலைத்துறைக்கு தமிழக அரசு ஒதுக்கி இருக்கிறது. இந்த நிதியில் பல்வேறு பணிகள் நடந்து வந்தாலும் எதுவுமே இதுவரை முடிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக கொடைக்கானலில் இருந்து பழநி செல்லக்கூடிய பிரதான சாலையில்தான் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவர். மேலும் இந்த சாலையில்தான் நிலச்சரிவு, பாறை உருளுதல் அதிகம் நிகழும். ஆனால் இங்கு பராமரிப்பு பணிகள் பல மாதங்களாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.  மேலும் பணிகள் நடக்கும் பல இடங்களில் எச்சரிக்கை பதாகைகளும் இல்லாமல் உள்ளது. இதனால் இவ்வழித்தடத்தில் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றன.

மேலும் இங்கு சாலை பணிக்காக கனரக வாகனங்கள் அதிகளவில் இயக்கப்படுவதால் இருக்கிற சாலையும் சேதமடைந்து வருகிறது. கொடைக்கானல் நகரில் பெரும்பாலான மக்கள் பயன்பாட்டில் இருக்கக்கூடிய பாம்பார்புரம் சாலையும் சேதமடைந்த நிலையில்தான் உள்ளது. இதேபோல் கொடைக்கானல் நகராட்சி சார்பில் உள்ள ஆனந்தகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகள் மிக, மிக மோசமாகவும் இருப்பதுடன், பணிகளும் ஆமைவேகத்தில் நடந்து வருகின்றன.

இதுகுறித்து கொடைக்கானல் வாழ் மக்கள் கூறுகையில், ‘கொடைக்கானலுக்கு வரும் பழநி, தாண்டிக்குடி சாலைகளில் பல இடங்கள் குண்டும், குழியுமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் விபத்தில் சிக்கியும், பழுதடைந்து ஆங்காங்கே நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு விடப்படும் சாலை டெண்டர்களை ஆளும்கட்சியினரே பெரும்பாலும் எடுத்து கொள்வதால் அதிகாரிகள் பணிகளை முறையாக கவனிப்பதில்லை என கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் உலக சுற்றுலா தலமாக உள்ள கொடைக்கானலில் அடிப்படை வசதிகளில் ஒன்றான சாலை வசதியை முழுமையாக மேம்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தற்போது நடந்து வரும் பணிகளை அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட வேண்டும்’ என்றனர்.

Related Stories: