கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்: மட்டையடி திருவிழா

கரூர், டிச. 31: கரூர் பசுபதீஸ்வரா கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவினை முன்னிட்டு நேற்று மட்டையடி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஆண்டுதோறும் மார்கழி மாதம் வரும் திருவாதிரை நட்சத்திர நாளில் அனைத்து ஈஸ்வரன் கோயில்களிலும் ஆருத்ர தரிசன விழா நடத்தப்பட்டு வருகிறது.கரூரில் உள்ள பசுபதீஸ்வரர் கோயிலில் ஆருத்ர தரிசன விழா கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து நேற்று மதியம் கோயில் வளாகத்தில், மட்டையடி திருவிழா நடைபெற்றது. பசுபதீஸ்வரருக்கு பல்வேறு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றதை தொடர்ந்து மட்டையடி விழா நடைபெற்றது.வாழை மட்டையை கொண்டு, பக்தர்களை அடிக்கும் விழாவாக இது நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோயில் சிவனாச்சார்களிடம் மட்டையடி பெற்றனர். பின்னர், கலந்து கொண்ட அனைத்து பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Stories: