3 வயது குழந்தை கொலை வழக்கில் செய்யாத தவறுக்கு 6 ஆண்டு சிறை பாதித்த நபர் இழப்பீடு கோரி மனு: உச்ச நீதிமன்றம் ஏற்பு

 

புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த 41 வயது நபர் ஒருவர், 3 வயது 9 மாத குழந்தையை பலாத்காரம் செய்து கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டார். இந்த வழக்கில் மகாராஷ்டிரா மாநிலம் தானே நீதிமன்றம் கடந்த 2019ல் அவருக்கு மரண தண்டனை விதித்தது. 2021ல் மும்பை உயர் நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது. 6 ஆண்டு சிறைவாசம் அனுபவித்த அந்த நபர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த போது, போலீஸ் விசாரணையில் குறைபாடு இருப்பதை சுட்டிக் காட்டி, கடந்த ஆண்டு மே மாதம் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட அந்த நபர் தனக்கு இழப்பீடு வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில், தவறுதலாக கைது செய்யப்பட்டதன் மூலம் 6 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த நிலையில், சிறையிலிருந்து விடுவிப்பது மட்டுமே போதுமானதாக இல்லை என்றும் மன உளைச்சல், வாழக்கை இழப்பு, பண இழப்பை ஈடு செய்ய உரிய இழப்பீட்டை மாநில அரசு வழங்க உத்தரவிடக் கோரி வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அமர்வு, வரும் நவம்பர் 24ம் தேதி விசாரணையை ஒத்திவைத்தது.

Related Stories: