சத் பூஜைக்கு பின்னர் பீகாரில் ராகுல் காந்தி, பிரியங்கா பிரசாரம்: காங். பொது செயலாளர் வேணுகோபால் தகவல்

பாட்னா: பீகாரில் சத் பூஜை முடிந்த பின்னர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பீகாரில் தேர்தல் பிரசாரம் செய்வார்கள் என காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார். பீகாரில் அடுத்த மாதம் 6ம் தேதி, 11ம் தேதி ஆகிய 2 நாள்களில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடக்கிறது.இதையொட்டி அங்கு பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் பொது செயலாளர் வேணுகோபால் நேற்று கூறுகையில்,‘‘ சத் பூஜைக்கு பின்னர் காங்கிரஸ் பிரசாரம் துவக்கப்படும். 29ம் தேதி ராகுல் காந்தி பீகார் வருவார் என நினைக்கிறேன். அதே போல் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்களும் பீகாருக்கு வந்து தீவிரமாக பிரசாரம் செய்வார்கள்’’ என்றார்.

ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்,‘‘முதல்வர் நிதிஷ்குமார் அரசியலில் யூடர்ன் அடிப்பதன் மூலம் தனது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளார். ஒரு காலத்தில் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்ற நிலையில் இருந்தவர். இப்போது பீகார் மக்கள் அவரை பார்த்து சோர்வடைந்துள்ளனர். இந்த முறை மாற்றத்திற்காக மக்கள் வாக்களிக்க விரும்புகின்றனர்’’ என்றார்.

Related Stories: