தொழில்முனைவோர் – புத்தாக்க நிறுவனம் சார்பில் சென்னையில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி: 5 நாள் நடக்கிறது

சென்னை: தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் சென்னையில் “தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி” வரும் 27ம் தேதி முதல் 31ம் தேதி வரை 5 நாள் நடக்கிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஈக்காட்டுத்தாங்கல், இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் நடக்கிறது. இந்த பயிற்சி வகுப்பில் தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களின் தரம் அறிதல், கேரட் மதிப்பீடுகள், ஆசிட் சோதனை, எடை அளவு இணைப்பான், விலை நிர்ணயிக்கும் முறை, ஹால் மார்க் மற்றும் போலியான நகைகளை அடையாளம் காணும் நடைமுறைகள் போன்றவை கற்றுத்தரப்படும்.

மேலும் ஆபரண கடனுக்கான கணக்கீட்டு முறைகள், தங்க அணிகலன் வகைகள் பற்றிய பயிற்சியும் அளிக்கப்படும். இதன் மூலமாக பொதுத்துறை, கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர் பணிக்கான வாய்ப்புகள், அவற்றை பெறும் நடைமுறைகள் அரசு திட்ட உதவிகள் மற்றும் மானியங்கள் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படும். பங்கேற்க விரும்பும் ஆண், பெண் மற்றும் திருநங்கைகள் 18 வயதிற்கு மேல் மற்றும் குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தங்கும் வசதி குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும். பயிற்சிக்கு முன்பதிவு அவசியம். மேலும் விவரங்களுக்கு மற்றும் முன்பதிவிற்கு www.editn.in அல்லது 98401 14680/93602 21280 என்ற எண்களில் அலுவலக நேரத்தில் தொடர்புகொள்ளலாம்.

Related Stories: