விறகு அடுப்பிலிருந்து தீ பரவி கணவன், மனைவி பரிதாப பலி

 

திருவனந்தபுரம்: விறகு அடுப்பிலிருந்து தீ பரவி கணவன், மனைவி உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். திருவனந்தபுரம் பேரூர்க்கடை ஹரிதா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆன்டனி (81). அவரது மனைவி ஷேர்லி (73). அவர்களது மகன் திருமணமாகி வெளியூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதனால் ஆன்டனியும், ஷேர்லியும் மட்டுமே வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று ஆன்டனி வீட்டின் பின்புறம் இருந்த விறகு அடுப்பில் குளிப்பதற்காக வெந்நீர் வைத்துக் கொண்டிருந்தார். அப்போது அடுப்பிலிருந்து அவரது வேட்டியில் எதிர்பாராதவிதமாக தீ பரவியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் தீ அவரது உடல் முழுவதும் பரவியது. அவரது சத்தத்தை கேட்டு அங்கு ஓடி வந்த மனைவி ஷேர்லி அவரை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரது உடலிலும் தீ பரவியது. இவர்களது அலறல் சத்தத்தைக் கேட்டு பக்கத்து வீட்டினர் விரைந்து வந்தனர். பின்னர் தீயை அணைத்து 2 பேரையும் மீட்டனர். தொடர்ந்து திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கணவன், மனைவி 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் குறித்து பேரூர்க்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: