நடைபயிற்சியின் போது நாய்கள் துரத்தியதால் மூதாட்டி பயத்தில் தவறி விழுந்து இடுப்பு எலும்பு உடைந்தது: தனியார் மருத்துவமனையில் அனுமதி

 

சென்னை: சைதாப்பேட்டையில் நடைபயிற்சியின் போது 4 தெரு நாய்கள் துரத்திய போது, மூதாட்டி பயத்தில் வேகமாக ஓட முயன்ற போது தவறி விழுந்து இடுப்பு எலும்பு உடைந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை எற்படுத்தியது. சென்னை சைதாப்பேட்டை நகர் காலனி மேற்கு மாட வீதியை சேர்ந்தவர் சவுந்தர்யா(70). இவர் வழக்கம் போல் வீட்டின் அருகே உள்ள மேற்கு மாடவீதியில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்கு சுற்றி கொண்டிருந்த 4 தெரு நாய்கள் மூதாட்டி சவுந்தர்யாவை பார்த்தவுடன் குரைத்தப்படி ஓடி வந்தது. இதை கவனித்த மூதாட்டி நாய்கள் தன்னை கடித்து விடுமோ என்ற அச்சத்தில் வேகமாக அங்கிருந்து ஓட முயன்றார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு இடுப்பு எலும்பு உடைந்து அலறினார்.

இதை பார்த்த பொதுமக்கள் துரத்திய தெரு நாய்களை விரட்டி அடித்தனர். பிறகு பொதுமக்கள் மூதாட்டியின் மகன் மகேஷ்க்கு தகவல் அளித்தனர். அதன்படி விரைந்த வந்த அவரது மகன் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் சம்பவம் குறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மூதாட்டியின் மகன் மகேஷ் அளித்த புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: