பிள்ளையார்குப்பம் பகுதியில் சேதமடைந்த படுகை அணையால் வீணாகும் மழைநீர்

*தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் விவசாயிகள் வேதனை

புதுச்சேரி : புதுச்சேரி பிள்ளையார்குப்பம் படுகை அணை சேதமடைந்துள்ளதால் மழைநீரை தேக்கி வைக்க முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.பிள்ளையார்குப்பம் சங்கராபரணி ஆற்றில் புதுச்சேரி சங்கராபரணி ஆறு தமிழக பகுதியான செஞ்சியிலிருந்து உருவாகி வீடூர் அணைக்கு வந்து அணை நிரம்பிய பிறகு புதுச்சேரி எல்லைக்குட்பட்ட கூனிச்சம்பட்டு, செல்லிப்பட்டு, வில்லியனூர், நோணாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளின் வழியாக வந்து வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.

இந்த ஆற்றுக்கு செஞ்சி ஆறு என்று மற்றொரு பெயர் உள்ளது. இதனை நம்பி ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். இந்த ஆற்றின் குறுக்கே புதுச்சேரி எல்லைக்குட்பட்ட மணலிப்பட்டு, சுத்துக்கேணி, செல்லிப்பட்டு, ஆரியப்பாளையம், வில்லியனூர், திருக்காஞ்சி, நோணாங்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள 7 பாலங்கள், கோனேரிக்குப்பம் பகுதியில் உள்ள 1 ரயில்வே பிரிட்ஜ் ஆகியவை கட்டப்பட்டுள்ளது.

நோணாங்குப்பம் பகுதியில் பாலத்துடன் கூடிய படுகை அணையும், பிள்ளையார்குப்பம் பகுதியில் படுகை அணை மட்டும் பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சியில் கட்டப்பட்டது. இதுவரை பாலத்துடன் கூடிய 4 படுகை அணைகளும், பாலமின்றி ஒரு படுகை அணையும் என மொத்தம் 5 படுகை அணைகள் உள்ளன.

இந்நிலையில் பருவமழையின்போது வீடூர் அணை நிரம்பி திறக்கப்படும்போது சங்கராபரணி ஆற்றின் வழியாக வரும் தண்ணீர் சுத்துக்கேணி பகுதியில் வரும்போது புதுச்சேரியின் மிகப்பெரிய ஏரியான ஊசுட்டேரிக்கு மதகு திறக்கப்பட்டு தண்ணீர் வரும்.

பிள்ளையார்குப்பம் பகுதியில் மதகு திறக்கப்பட்டு தண்ணீரானது பத்துக்கண்ணு, கூடப்பாக்கம், வில்லியனூர், கொம்பாக்கம் வழியாக உழந்தை ஏரிக்கு செல்லும். இதனால் ஏரிகள் நிரம்பி சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் செழித்து வளர்ந்து வந்தது.

நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்டதால் குடிநீர் பற்றாக்குறையின்றி இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு பிள்ளையார்குப்பம் படுகை அணையில் உடைப்பு ஏற்பட்டதால் ஒவ்வொரு முறையும் தண்ணீர் வரும்போது அணையில் தண்ணீர் தேங்கி நிற்காமல் வெளியேறி சென்றது. முன்பெல்லாம் அணை நிரம்பிய பிறகு 6 மாதத்துக்கு மேலாக தண்ணீர் தேங்கி நிற்கும். ஆனால் நாளடைவில் தண்ணீர் ஒரு மாதம் கூட தேங்கி நிற்காத நிலை ஏற்பட்டது.

இதனை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்தந்த மழை பருவத்தில் மணல் மூட்டைகளை ெகாண்டு உடைப்புகளை மூடி சரிசெய்து வந்தனர். அப்போது தண்ணீர் வரும்போது மணல் மூட்டைகள் அனைத்தும் அடித்து செல்லப்பட்டு மீண்டும் பழைய நிலையை அடைந்துவிடும்.
இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பருவமழையின்போது சங்கராபரணி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் சென்றது.

இதனால் பிள்ளையார்குப்பம் படுகை அணையில் தண்ணீர் நிரம்பி வழியும்போது இயற்கையின் அழகு அவ்வளவு ரம்மியமாக இருந்தது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் இந்த படுகை அணைக்கு வந்து மகிழ்ச்சியாக குளித்து ரசித்து சென்றனர். அப்போது இப்பகுதி ஒரு சுற்றுலா தலமாக விளங்கியது. பிறகு 2021ம் ஆண்டு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது அணையானது முற்றிலுமாக உடைந்து சேதமடைந்துவிட்டது. இதனால் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சேதமடைந்த படுகை அணையை பொதுப்பணித்துறை அமைச்சர் ஆய்வு செய்து இப்பகுதியில் அடுத்த மழைக்காலத்துக்குள் ரூ.20.40 கோடியில் புதிய படுகை அணை கட்டப்படும் என்று கூறினார். ஆனால் படுகை அணை உடைந்து 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இந்தாண்டு எவ்வளவு மழை பெய்தாலும் அப்பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்காமல் ஆற்றில் சென்று கடலில் கலக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கோனேரிக்குப்பத்தை சேர்ந்த லோகையன் கூறுகையில், வீடூர் அணையில் இருந்து புதுச்சேரிக்கு தண்ணீர் அனுப்பும் திட்டத்தை காமராஜர் காலத்தில் துவக்கி வைக்கப்பட்டது. இதனால் தான் ஊசுட்டேரிக்கு அதிகப்படியான தண்ணீர் வந்து சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் பற்றாக்குறையை போக்கி வருகிறது. சங்கராரபணி ஆறு புதுச்சேரி மாநிலத்தில் மட்டும் 30 கிலோ மீட்டர் செல்கிறது.

ஆகவே 3 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பு அணைகளை கட்டி தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும். ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்களை கோடை காலங்களில் தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரி, குளம் போன்றவற்றின் கரைகளை பலப்படுத்தி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். விவசாயிகளுக்கு என நீண்டகால திட்டம் எதுவும் இல்லை. மழைநீரை சேமிப்பதற்கான திட்டத்தை செயல்படுத்த தகுதி வாய்ந்த அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.

அணைகளில் சீர்குலைந்துள்ள மதகு பலகைகளை சீரமைத்து தண்ணீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே புதுச்சேரியில் பல பகுதிகளில் உப்பு நீர் உட்புகுந்துள்ளது. இந்நிலை நீடித்தால் விரைவில் அனைத்து பகுதிகளிலும் உப்புநீர் உட்புகுந்து குடிநீருக்காக வெளிமாநிலத்தில் கையேந்தும் நிலை ஏற்படும்.

புதுச்சேரியில் ஏற்கனவே பிரெஞ்சுக்காரர்கள் ஏற்படுத்திய திட்டத்தை தான் நாம் அனுபவித்து வருகிறோம். இதுவரை மழைநீரை சேமிக்க எந்தவித புதுதிட்டமும் செயல்படுத்தவில்லை. எனவே சங்கராபரணி ஆற்றில் ஆங்காங்கே படுகை அணைகளை கட்ட வேண்டும். ஏற்கனவே உள்ள படுகை அணைகளின் உயரத்தை உயர்த்தி சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

‘‘ரூ.200 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம்’’

பொதுப்பணித்துறை (நீர்பாசனக்கோட்டம்) உதவிப்பொறியாளர் மதிவாணனிடம் கேட்டபோது, தற்போது பிள்ளையார்குப்பம் சங்கராபரணி ஆற்றில் உள்ள படுகை அணை சேதமடைந்துள்ளது. இதனை தற்போதுள்ளபடி பழமை மாறாமல் அதே அளவில் புதியதாக கட்டுவதற்கு ரூ.20 கோடிக்கு டெண்டர் விடப்பட்டது. பிறகு படுகை அணைக்கான சரியான திட்டமிடல் கணிக்க முடியாததால் அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் சுமார் ரூ.200 கோடியில் புதிதாக அணை கட்டப்பட்டு புதுச்சேரி நகர பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்ல உயர்தர கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: