குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே பூசாரிகளாக நியமனமா? கேரள உயர்நீதிமன்றம் ஏற்க மறுப்பு

திருவனந்தபுரம்: திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் கடந்த 2023ம் ஆண்டு பகுதிநேர பூசாரிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் பூஜை முறைகளை கற்பிக்கும் மையங்கள் வழங்கும் சான்றிதழ்கள் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து அகில கேரள தந்திரிகள் சமாஜம் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதில், மேற்கண்ட அறிவிப்பால், பாரம்பரிய தந்திரிகளிடமிருந்து நேரடியாக பூஜை முறைகளை கற்றவர்களுக்கு வாய்ப்பு இல்லாத நிலை ஏற்படுகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் ராஜா விஜயராகவன், ஜெயகுமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாரம்பரிய தந்திரிகளின் கீழ் பூஜை படித்தவர்களை மட்டுமே பகுதி நேர பூசாரிகளாக நியமிக்க வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கையை டிவிஷன் பெஞ்ச் ஏற்க மறுத்தது.

ஒரு குறிப்பிட்ட பிரிவு மற்றும் பாரம்பரியத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பூசாரிகளாக நியமிக்கப்பட தகுதி உடையவர்கள் என்ற நிபந்தனையை, அத்தியாவசிய மத வழக்கம், நடைமுறை மற்றும் வழிபாட்டின் வலுவான தேவையாக கருத முடியாது என்றும், அதற்கு சட்ட அடிப்படைகள் இல்லை என்றும் நீதிபதிகள் கூறினர்.

Related Stories: