கல்லை கடவுளாக மாற்றத் தெரிந்தவன் மனிதனாக மாற மறந்து விட்டான்: கரூர் சம்பவத்தில் அழுதது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

மதுரை: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், மாணவ – மாணவிகளுக்கான ‘தமிழ் முழக்கம்’ மேடைப்பேச்சு ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் பன்னாட்டு பயிலரங்க தொடக்க விழா, மதுரை உலக தமிழ் சங்கத்தில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியை பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தமிழ் முழக்கம் மேடைப்பேச்சு ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சியில் தேர்வு செய்யப்படும் மாணவர்களை வைத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் மற்ற மாணவர்களுக்கு தூதுவர்களாக பயிற்சி அளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். மாணவர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்க இது உதவும்.

மழைக்காலம் என்பதால் பள்ளி வளாகங்களில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அகற்ற தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், பள்ளிகளில் மின் கசிவுகள் உள்ளிட்ட மின்சாரம் சார்ந்த பிரச்னைகள் ஏதும் உள்ளதா என ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. உணர்ச்சிகளும், அறிவும் சார்ந்து சமமான பேச்சுகள் அமைந்திட வேண்டும். இது பேச்சாளர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கும் இதை எடுத்துக்காட்டாக கூறலாம்’’ என்றார்.

அப்போது, கரூர் கூட்டநெரிசல் உயிரிழப்புச் சம்பவத்தின் போது அழுதது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர், ‘‘உணர்ச்சிகள் அதிகமாகி அறிவு குன்றி இருந்தால் விலங்குக்கு சமம். அறிவு அதிகமாகி உணர்ச்சிகள் குன்றி இருந்தால் மரத்திற்கு சமம் என வள்ளுவர் கூறியுள்ளார், அந்த குறளை மேற்கோள்காட்டியே பார்க்கிறேன். முதலில் நான் மனிதன். ஒரு கல்லை கடவுளாக மாற்றத் தெரிந்தவன், ஒரு மனிதனாக மாற மறந்து விட்டான்’’ என்று தெரிவித்தார்.

Related Stories: