×

பிளாஸ்டிக் கவரால் முகத்தை மூடி மூச்சை திணறடித்து மனைவி, மகன்களை துடிக்க துடிக்க கொன்று கழுத்தறுத்து தற்கொலை செய்த தொழிலதிபர்: கடன் தொல்லையால் விபரீத முடிவு; ஈஞ்சம்பாக்கத்தில் பரபரப்பு சம்பவம்

சென்னை: கடன் தொல்லையால் ஆந்திர தொழிலதிபர் ஒருவர், தனது மனைவி மற்றும் 2 மகன்களை ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது, அவர்கள் முகத்தை பிளாஸ்டிக் கவரால் மூடி மூச்சை திணறடித்து துடிக்க துடிக்க கொடூரமாக கொலை செய்துள்ளார். பிறகு தொழிலதிபரும் பாத்ரூமில் கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்பு தொழிலதிபர் எழுதிய உருக்கமாக கடிதத்தை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சிரஞ்சீவி தாமோதர குப்தா (56), தொழிலதிபர். இவரது மனைவி ரேவதி (46), மகன்கள் ரித்விக் அர்ஷத் (15) மற்றும் தித்விக் அர்ஷத் (11). தொழிலதிபர் சிரஞ்சீவி சென்னை அண்ணா சாலையில் உள்ள ரிச் தெருவில் எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் சிசிடிவி கேமரா மொத்த விற்பனை கடை நடத்தி வந்தார். சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மூத்த மகன் அர்ஷத் 10ம் வகுப்பும், இரண்டாவது மகன் தித்விக் அர்ஷத் 7ம் வகுப்பும் படித்து வந்தனர். மகன்கள் பள்ளி படிப்புக்காக தொழிலதிபர் சிரஞ்சீவி, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கம் ‘சாகாஷ் வைபவ் என்கிளைவ்’ என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு குடியேறியுள்ளார்.

தொழிலதிபர் என்பதால் சிரஞ்சீவி, கொரோனா இழப்புக்கு பிறகு தனது கடையை விரிவுபடுத்த பல கோடிக்கு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் கடன் கொடுத்த நபர்கள் தொழிலதிபர் சிரஞ்சீவியை பணம் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கியவர்களும் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் தொழிலதிபருக்கு ெநருக்கடி கொடுத்து வந்ததால், சிரஞ்சீவி கடும் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.

அதேநேரம் கடன் கொடுத்தவர்கள் தொழிலதிபர் மனைவி ரேவதிக்கு நேரடியாக தொலைபேசியில் பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடன் தொல்லையால் ‘தீபாவளி’ பண்டிகையையும் தொழிலதிபர் கொண்டாடவில்லை. தனது மகன்களுக்கும் புதிய துணிகள் மற்றும் பட்டாசுகள் கூட அவர் வாங்கி கொடுக்கவில்லை என்று அருகில் வசிப்பவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 4.10 மணிக்கு தொழிலதிபர் சிரஞ்சீவி, சேலத்தில் வசித்து வரும் தனது மாமா முரளி என்பவரின் வங்கி கணக்கிற்கு ரூ.1 லட்சம் பணம் அனுப்பியுள்ளார்.

அதிகாலை முரளி எழுந்து தனது போனை பார்த்த போது, சிரஞ்சீவி ரூ.1 லட்சம் பணம் அனுப்பியதற்கான மெசேஜ் இருந்தது. உடனே பணம் ஏன் அனுப்பினார் என்பது குறித்து விசாரிக்க, முரளி, தொழிலதிபர் சிரஞ்சீவிக்கு போன் செய்துள்ளார். வெகு நேரம் போன் அடித்தும், சிரஞ்சீவி போனை எடுக்காததால் சந்தேகமடைந்த முரளி, சென்னை சாலிகிராமத்தில் வசித்து வரும் சிர்ஞசீவியின் மனைவி ரேவதியின் தம்பி, சாய் கிருஷ்ணாவுக்கு போன் செய்து தகவல் கூறி, சிரஞ்சீவி வீட்டிற்கு நேரில் சென்று பார்க்க அனுப்புள்ளார்.

அதன்படி, சாய் கிருஷ்ணாவும் தனது சகோதரி ரேவதி வீட்டிற்கு பதறி அடித்துக் கொண்டு காலை 7 மணிக்கு ஓடி வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. ஒருவித பதற்றத்துடன் சாய் கிருஷ்ணா, உள்ளே சென்று பார்த்த போது, படுக்கை அறையில் தனது சகோதரி ரேவதி மற்றும் இரண்டு மகன்கள் படுக்கையிலேயே முகத்தில் பிளாஸ்டிக் கவரால் மூடிய நிலையில் இறந்து கிடந்தனர். தனது மாமாவான தொழிலதிபரை தேடிய போது, அவர் படுக்கை அறையில் உள்ள பாத்ரூமில், தனது கால்களை கட்டிய நிலையில் கத்தியால் கை மணிகட்டு மற்றும் கழுத்தை அறுத்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத சாய் கிருஷ்ணா அதிர்ச்சியடைந்து, நீலாங்கரை போலீசாருக்கு சம்பவம் குறித்து தகவல் அளித்தார். அதன்படி விரைந்து வந்த நீலாங்கரை போலீசார், தொழிலதிபர் சிரஞ்சீவி மற்றும் அவரது மனைவி ரேவதி, 2 மகன்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் தொழிலதிபர் வீடு முழுவதும் சோதனை நடத்தினர். அப்போது, தமிழில் எழுதப்பட்ட கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதைதொடர்ந்து சாய் கிருஷ்ணன் அளித்த புகாரின்படி நீலாங்கரை போலீசார், வழக்கு பதிவு செய்தனர். தொழிலதிபர் சிரஞ்சீவி யார், யாரிடம் கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் மிரட்டினார்களா என தொழிலதிபர் மற்றும் அவரது மனைவியின் செல்போன்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தொழிலதிபரிடம் கடைசியாக பேசிய நபர் யார் என்பது குறித்தும் விசாரிக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில் தொழிலதிபர் சிரஞ்சீவி தனது மனைவி மற்றும் மகன்களை கொலை செய்வதற்கு முன்பு, தற்கொலைக்கான கடிதத்தை எழுதி வைத்துள்ளார்.

இதனால் அவர் தனது தற்கொலைக்கு பிறகு கடன் கொடுத்த நபர்களால் மனைவி மற்றும் மகன்களுக்கு ஆபத்து வரும் என யோசித்துள்ளார். இதனால் அவர் மனைவி மற்றும் மகன்களை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்யும் முடிவை எடுத்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், அந்த கடிதத்தில் மனைவி ரேவதியும் கையெழுத்து போட்டுள்ளார். இதனால் போலீசாருக்கு லேசான சந்தேகம் எழுந்துள்ளது. கடிதத்தில் நேற்று தேதி 22 என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் நேற்று அதிகாலை தான் அவர் குடும்பத்தை கொன்றுவிட்டு தற்கொலை முடிவுக்கு சென்றது தெரியவந்துள்ளது. மனைவி கடிதத்தில் கையெழுத்து போட்டுள்ளார்.

இதனால் தொழிலதிபர், தனது மனைவியை முகத்தில் பிளாஸ்டிக் கவரால் மூடி மூச்சை திணறடித்து ஏன் கொலை செய்ய வேண்டும். இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். ஆனால் ரேவதி தனது 2 மகன்களை போல் பிளாஸ்டிக் கவரால் மூச்சை திணறடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் தொழிலதிபர் சிரஞ்சீவியின் மனைவிக்கு தற்கொலை செய்ய விருப்பமில்லை என்பதும், இதனால் தொழிலதிபர் மகன்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது, மனைவியை வலுக்கட்டாயமாக பிளாஸ்டிக் கவரால் முகத்தை மூடி கொலை செய்துள்ளார். அதன் பிறகு தான் தனது இரண்டு மகன்களையும் அவர் கொலை செய்து இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், குடும்பம் முழுவதையும் கொன்று விட்டதால், தொழிலதிபர் சிரஞ்சீவி தனது கால்களை கயிறால் கட்டிக் கொண்டு, பாத்ரூமில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ெதாழிலதிபர், மனைவி மற்றும் இரு மகன்களை கொலை செய்தது, தனது மனைவியின் உறவினர்களுக்கு ரேவதியின் சம்மதத்துடன் கொன்றதை நம்ப வைக்க தொழிலதிபர் சிரஞ்சீவி கடிதத்தில் மனைவியின் கையெழுத்தை அவரே போட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் முழுமையான விசாரணைக்கு பிறகு தான் கொலை மற்றும் தற்கொலைக்கான தகவல்கள் வெளியே வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை செய்து கொண்ட தொழிலதிபர் சிரஞ்சீவி பூர்வீகம் ஆந்திர மாநிலம் என்றாலும், அவரது தந்தை ஜானகிராமன் குப்தா தனது குடும்பத்துடன் சேலத்தில் குடியேறியுள்ளார். சிரஞ்சீவி மட்டும் திருமணத்திற்கு பிறகு சென்னையில் எலக்ட்ரானிக் கடை வைத்து தொழில் செய்து வந்துள்ளார். குடும்பத்தினர் அனைவரும் வந்த பிறகு தான், தொழிலதிபரின் தற்கொலைக்கு முழுமையான விவரங்கள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திர தொழிலதிபர் ஒருவர், தனது மனைவி மற்றும் மகன்களை கொடூரமாக பிளாஸ்டிக் கவரால் முகத்தை மூடி கொலை செய்துவிட்டு, தானும் கத்தியால் கழுத்து மற்றும் கை மணிக்கட்டை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

⦁ தொழிலில் நஷ்டம்
தொழிலதிபர் மனைவி மற்றும் இரண்டு மகன்களை கொடூரமாக கொலை செய்துவிட்டு தற்ெகாலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதி வைத்த கடிதம் போலீசார் நடத்திய சோதனையில் சிக்கியது. அந்த கடிதத்தில் ‘தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், கடன் எதையும் இதற்கு மேல் திருப்பி செலுத்த முடியாத காரணத்தால், சிரஞ்சீவி என்னும் நான், எனது குடும்பத்தோடு உயிரை மாய்த்துக்கொள்கிறேன். எங்களது இறப்பிற்கு யாரும் பொறுப்பல்ல. இதை நான் எல்லோருக்கும் தொிவித்துக் கொள்கிறேன்’ என எழுதப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில் தற்கொலை செய்து கொண்ட தொழிலதிபர் கையெழுத்து மற்றும் அவரது மனைவி ரேவதியின் கையெழுத்தும் போடப்பட்டுள்ளது.

 

Tags : Injambakkam ,Chennai ,Andhra Pradesh ,
× RELATED ஆலங்குளம் அருகே முயல் வேட்டையில் ஈடுபட்ட 5 பேர் கைது