தீபாவளிக்கு வெளியான ‘தம்மா’ படத்தை இணையதளங்களில் வெளியிட ஐகோர்ட் தடை

சென்னை: புதிதாக வெளியாகும் திரைப்படங்கள் சட்டவிரோதமாக ஒளிபரப்பு செய்யப்படுவது தடுக்கப்படாவிட்டால் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டம் அடைவர் என்று தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம் “தம்மா” திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ராஷ்மிகா மந்தனா மற்றும் ஆயுஷ்மான் குரானா உள்ளிட்டோர் நடிப்பில் ஆதித்யா ஸ்ரீபோத்தர் இயக்கத்தில் இந்தியில் வெளியாகியுள்ள தம்மா திரைப்படத்தை மேட்டாக் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 145 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21ம் தேதி வெளியாகியுள்ள இந்த படத்தை கேபிள் டிவிக்கள், இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடுவதை தடுக்க இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடக்கோரி படத்தின் தயாரிப்பு நிறுவனமான மேட்டாக் பிலிம்ஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.செந்தில்குமார், “தம்மா” படத்தை இணையதளங்களிலும், கேபிள் டிவிக்களிலும் சட்டவிரோதமாக வெளியிடுவதற்கு நவம்பர் 14ம் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், புதிதாக வெளியாகும் திரைப்படங்கள் சட்டவிரோதமாக ஒளிபரப்பு செய்யப்படுவது தடுக்கப்படாவிட்டால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

Related Stories: