சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது என வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் அமுதா பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் 17 இடங்களில் கனமழை பதிவாகி உள்ளது. தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அரபிக் கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நீடிக்கிறது.
சென்னையில் வரும் 23ஆம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டில் 58.9 சென்டிமீட்டர் மழை பெய்த நிலையில், இந்த ஆண்டு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறினார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பை விட அதிகரித்து காணப்படும் என்றும் அமுதா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அக்டோபர் 1 முதல் 16ஆம் தேதி வரை வழக்கத்தை விட கூடுதலாக 37 சதவீதம் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் இந்த ஆண்டு 50 சென்டிமீட்டர் வரை மழைப்பொழிவு இருக்கக்கூடும் என்றும் தெரிவித்தார். விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அக்டோபர் 24ஆம் தேதி மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும் தெரிவித்துள்ளார். இத்தனை புயல்கள் வரும் என்பதை கணக்கிட்டு கூற முடியாது என்றும் தெரிவித்துள்ளார். அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இரண்டு நாட்களுக்கு சில மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழக கடலோரப் பகுதிகள், கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்தார். கடலுக்குச் சென்ற மீனவர்கள் வரும் 21ம் தேதி காலைக்குள் கரைக்குத் திரும்ப வானிலை மையம் அறிவுறுத்தியுளளார்.
