புதுடெல்லி: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்களை காவல்துறையினர் கைது செய்ததோடு அவர்களை அடித்து உதைத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கறிஞர்களை காவல்துறையினர் தாக்கியதோடு சட்டத்தை மீறி நடத்தப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், ஓய்வு பெற்ற நீதிபதி வி.பார்த்திபன் ஆணையத்தை அமைத்து விசாரணையை தொடங்க உத்தரவிட்டது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் உயர்நீதிமன்றம் முன்னதாக பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி விக்ரம் நாத் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதை எடுத்து மனுவை பரிசீலனை செய்த நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர்பாக முன்னதாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடைவிதித்து உத்தரவிட்டனர்.
