சென்னை: காங்கிரஸ் தலைமை அலுவலகம் சத்தியமூர்த்தி பவன், கவர்னர் மாளிகை, இன்போசிஸ் ஐடி நிறுவனம், தனியார் தொலைக்காட்சி அலுவலகம் உள்பட 7 இடங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர். சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் நள்ளிரவு மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில் ‘தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் சத்தியமூர்த்தி பவன், கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை, கோடம்பாக்கத்தில் உள்ள பிடிஐ அலுவலகம், ஈக்காட்டுதாங்கல் பகுதியில் உள்ள தனியார் தொலைக்காட்சி, துரைப்பாக்கத்தில் உள்ள சென்னை ஒன் ஐடி நிறுவனம் மற்றும் சோழிங்கநல்லூரியில் உள்ள இன்போசிஸ் உள்பட 7 இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், முடிந்தால் எடுத்துக்கொள்ளுங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து காவலர்கள் பாதுகாப்பு துறைக்கு தகவல் அளித்தனர். அதன்படி அண்ணா சாலை போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் ஜி.பி.சாலையில் உள்ள சத்தியமூர்த்தி பவன் முழுவதும் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை. இதையடுத்து இது வெறும் புரளி என தெரியவந்தது. அதேபோல் கிண்டி போலீசார் கவர்னர் மாளிகை முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனை நடத்தினர். அதிலும் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை. குமரன் நகர் போலீசார் தலைமையில் ஈக்காட்டுதாங்கல் பகுதில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் சோதனை நடத்தினர். அங்கேயும் வெடிகுண்டுகள் சிக்கவில்லை. துரைப்பாக்கம் போலீசார் உதவியுடன் சென்னை ஒன் ஐடி நிறுவனம், சோழிங்கநல்லூரியில் உள்ள இன்போசிஸ் ஐடி நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின் போது ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், சூளைமேடு பகுதியில் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. மிரட்டல் விடுக்கப்பட்ட 7 இடங்களிலும் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை. இதையடுத்து காவல்துறை இயக்குநர் அலுவலகம் மற்றும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை மாநில சைபர் க்ரைம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக சென்னை முழுவதும் பிரபலமான இடங்களுக்கு தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
