சொத்து தகராறில் உறவினரை கொல்ல திட்டமிட்ட 4 வாலிபர்கள் கைது

நெல்லை, டிச. 27: பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே ஒரு விடுதியில் நான்கு பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் ஒருவரை வெட்டிக் கொல்ல திட்டமிட்டது மாநகர உளவுத் துறைக்கு தெரியவந்தது. இதுகுறித்து பாளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து நேற்று அதிகாலையில் சம்பந்தப்பட்ட விடுதியை சுற்றி வளைத்த போலீசார் அங்குள்ள அறையில் பதுங்கியிருந்த 4 வாலிபர்களை பிடித்து பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பிடிபட்ட 4 பேரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில், தேவர்குளம் அருகேயுள்ள முத்தம்மாள்புரத்தை சேர்ந்த பால்ராஜ் மகன் செல்வம் என்ற செல்வராஜ் (28), சுத்தமல்லியைச் சேர்ந்த முருகன் மகன் இசக்கிமுத்து (32), நெல்லை டவுன் பாட்டப்பத்தை சேர்ந்த வேலாயுதம் மகன் லட்சுமணன் (32) மற்றும் டவுன் வயல் தெருவை சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் சுரேஷ் (34) ஆகியோர் எனவும், செல்வராஜூவுக்கும்,  அவரது நெருங்கிய உறவினருக்கும் இடையே சொத்துத் தகராறு மற்றும் சுமார் ரூ.10 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கல் வாங்கல் ஆகிய தகராறுகள் நடந்து வருகிறது.

இதனால் செல்வராஜ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து உறவினரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது. செல்வராஜின், உறவினர் தினமும் தேவர்குளத்திலுள்ள வீட்டிலிருந்து பைக்கில் மானூரிலுள்ள தனது நண்பரின் கடைக்கு இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் வந்து செல்வார். அப்போது அவரை பைக்கால் மோதி கீழே தள்ளி அரிவாளால் வெட்டிக்கொலை செய்ய திட்டமிட்டுள்ளது போலீசாரின் விசாரணையில் திடுக் தகவல்கள் தெரிய வந்தது.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் நெல்லை மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். தேவர்குளம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராமர், எஸ்ஐ ரெங்கசாமி ஆகியோர் பாளை. காவல் நிலையத்திற்கு வந்து செல்வராஜ், இசக்கிமுத்து உள்ளிட்ட 4 பேரிடம் மேல் விசாரணை நடத்தினர். இதுகுறித்து தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிந்து செல்வம் என்ற செல்வராஜ், இசக்கிமுத்து, லட்சுமணன், சுரேஷ்குமார் ஆகிய 4 பேரை கைது செய்து இரு அரிவாள்கள், இரு பைக்குகள், 4 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் செல்வராஜ் உள்ளிட்ட 4 பேரை போலீசார் வைகுண்டம் கிளைச் சிறையில் நேற்று அடைத்தனர்.

Related Stories: