கலெக்டர் பேட்டி திருச்சி மண்டலத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு கமலஹாசன் தேர்தல் பிரசாரம்

திருச்சி, டிச. 27: திருச்சி மண்டலத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் பிரசாரம் செய்கிறார் என்று பொது செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்ய பொது செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசார பயணத்தை மதுரையில் துவங்கி அடுத்தகட்டமாக சென்னை உள்ளிட்ட ஊர்களில் முடித்துள்ளார். 3வது கட்டமாக இன்று திருச்சிக்கு வரும் தலைவர் கமலஹாசனின் பிரசார பயணம் குறித்து பொது செயலாளர் முருகானந்தம் தலைமையில் திருச்சி மண்டலத்துக்கு உட்பட்ட கட்டமைப்பு சார்பு அணிகளை சேர்ந்த மாநில, மண்டல, மாவட்ட நகர மற்றும் ஒன்றிய செயலாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் எஸ்ஆர்எம் ஹோட்டலில் நடந்தது. தலைவர் கமல்ஹாசன் இன்று முதல் வரும் 30ம் தேதி வரை 3வது கட்ட தேர்தல் பிரசார பயணத்தை மேற்கொள்ள உள்ளார். அதன்படி முதல் நாள் திருச்சி ரம்யாஸ் ஹோட்டலில் தொழில் முனைவோர்களுடன் சிறப்பு கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

அதைதொடர்ந்து காட்டூர் சிங்கார மஹாலில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். பின்னர் திருச்சி எஸ்ஆர்எம் ஹோட்டலில் மகளிர், இளைஞர் மற்றும் மாணவர்களிடையே உரையாற்றுகிறார். 2 நாட்கள் பிரசாரத்தின்போது திருவெறும்பூரில் உள்ள கட்சியின் 3வது தலைமையகத்தில் பொதுமக்களை சந்தித்து பேசுகிறார். இதற்கிடையில் திருச்சியில் உள்ள பிரதான சாலைகளில் நகர்வலம் வரவிருக்கிறார். திருச்சியை அடுத்து தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, வேதாரண்யம் ஆகிய ஊர்களுக்கு சென்று சிறப்பு கூட்டங்களில் கமலஹாசன் பங்கேற்கிறார். 3வது நாள் நாகப்பட்டினம், நாகூர், மயிலாடுதுறை, திருபுவனம், கும்பகோணம், கந்தர்வகோட்டை மற்றும் புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கு சென்று சிறப்பு கூட்டங்களில் பங்கேற்கிறார். வரும் 30ம் தேதியன்று திருமயம், காரைக்குடி, காளையார்கோவில், பரமக்குடி, சிவகங்கை மற்றும் அருப்புக்கோட்டையில் பிரசார பயணத்தை நிறைவு செய்கிறார். பிறகு மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை திரும்புகிறார். நம்மவர் டாக்டர் கமல்ஹாசன் தலைமையில் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் நேர்மையான ஆட்சியமைக்க மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து செயல்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: