பெங்களூரு: மைசூரு தசரா விழாவின் நிறைவு நாளில் சுமார் 10 லட்சம் பேர் அம்மன் ஊர்வலத்தை கண்டு வழிபட்டனர். கண்கவர் கலை நிகழ்ச்சிகளில் வாணவேடிக்கையும் யானைகள் ஊர்வலமும் மைசூரு நகரத்தையே கலைக்கட்ட வைத்தது. கர்நாடக மாநிலம் மைசூருவில் மன்னர் ஆட்சி காலம் முதல் நூற்றாண்டுகளாக தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 415ஆம் ஆண்டு தசரா திருவிழா கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கியது. இந்த விழாவின் ஒரு பகுதியாக கடந்த 10 நாட்களாக கலைநிகழ்ச்சிகள், மலர்கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தசரா ஊர்வலம் காந்தி ஜெயந்தி நாளில் வழக்கமான கொண்டாட்டங்களோடு தொடங்கியது. மைசூரு மன்னரும் எம்.பி.யுமான யதுவீர் அங்குள்ள வன்னிமரத்துக்கு பூஜை செய்து தொடங்கி வைத்தார். அதன் பின்னர் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் ஆகியோர் நந்தி பூஜை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக 58 வாகனங்களில் அலங்கார ஊர்வலம் நடைபெற்றது. அத்துடன் கர்நாடக கலை, பண்பாடு, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக ஒற்றை யானை கொடை சூழ அதிமஞ்சு என்ற யானை மீது 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியில் அமைத்து அதில் சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையை வைத்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அப்போது சிலை மீது மலர்கள் தூவி மக்கள் வழிபாடு செய்தனர். அரண்மனை வளாகத்தில் தொடங்கிய ஊர்வலம் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வாணிமண்டபம் வரை நடைபெற்றது. அப்போது மிகப்பிரமாண்டமாக அளவில் வாணவேடிக்கை நடத்தப்பட்டது. இந்த ஆண்டு மைசூரு தசரா விழாவின் நிறைவு நாளில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.
