சென்னையில் பயங்கரம்; 100 பவுன், 2 கிலோ வெள்ளி, ரூ.5 லட்சம் கேட்டு பெண் வழக்கறிஞர் சித்ரவதை: மின்வாரிய செயற்பொறியாளர் கைது: மாமியார், மைத்துனருக்கு போலீஸ் வலை

அண்ணாநகர்: சென்னையில் 100 பவுன், 2 கிலோ வெள்ளி, ரூ.5 லட்சம் ரொக்கம் கேட்டு பெண் வழக்கறிஞரை சித்ரவதை செய்த மின்வாரிய செயற்பொறியாளர் கைது செய்யப்பட்டார். அவரது மாமியார், மைத்துனரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் சுமதி (26, பெயர் மாற்றம்). இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த அரிஷ் (31) என்பவருக்கும் கடந்த 2.2.2025 அன்று பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. அரிஷ், மின்வாரிய அலுவலகத்தில் செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார். திருமணத்திற்கு முன்பு மாப்பிள்ளை மின்வாரியத்தில் அரசு அதிகாரியாக வேலை பார்க்கிறார் என்றும் சீர்வரிசையாக 100 பவுன் நகை போட வேண்டும் என்றும் மாப்பிள்ளை வீட்டார் கறாராக பேசியுள்ளார்கள்.

அதன்படியே சுமதி வீட்டாரும் 100 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்களையும் சீர்வரிசையாக வழங்கியுள்ளனர். திருமணம் நடந்து மாதங்கள் பல கடந்தும், அரிஷுடன் சுமதியை நெருங்கி பழக அவரது மாமியார் தேவிகா விடுவதில்லை. மேலும் செல்போனில் பேச விடுவதில்லை, சமைக்கும் உணவையும் சாப்பிட விடாமலும் தடுத்துள்ளார். அரிஷும், சுமதியும் ஒன்றாக இருப்பதற்கு மாமியார் தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருந்து வந்தார். இதனால் விரக்தியடைந்த சுமதி, இதுபற்றி மாமியாரிடம் கேட்டபோது, ‘என் மகன் அப்படிதான் இருபபான். என் மகன் உன்னுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்றால் வங்கி லாக்கரில் வைத்துள்ள 100 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி, ரூ. 5 லட்சம் ரொக்கம் மற்றும் திருச்சியில் காலிமனையை என் மகன் பெயர் மீது எழுதி வைக்க வேண்டும்’ என்று கூறி மாமியார் தேவிகா மிரட்டியுள்ளார். இதற்கு சுமதி சம்மதிக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கணவர் அரிஷ், மாமியார் தேவிகா, மைத்துனர் ரஜினிஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து சுமதியின் தலைமுடியை பிடித்து இழுத்து கீழே தள்ளி சரமாரியாக தாக்கி சித்ரவதை செய்தனர். இது பற்றி எந்த ஒரு தகவலையும் பெற்றோரிடமும் சுமதி சொல்லவில்லை. நாட்கள் செல்ல செல்ல கணவர் வீட்டாரின் சித்ரவதை அதிகரித்துள்ளது. மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டார். கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான சுமதி, தற்கொலை செய்யும் அளவுக்கு சென்றார். இனியும் அவர்களுடன் வாழ்ந்தால் கொலை செய்து விடுவார்கள் என சுமதி பயந்து பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் சம்பவம் குறித்து அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று சுமதி புகார் செய்தார். அதில், ‘வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்யும் எனது கணவர், மாமியார், மைத்துனர் ஆகிய 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இன்ஸ்பெக்டர் லதா வழக்கு பதிவு செய்து அரிஷ், தேவிகா, ரஜினிஷ் ஆகியோரை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்தனர். இதில் அரிஷ், அரசு அதிகாரி என்பதால் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தார். அதனால் போலீசார் நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகும்படி கூறினர். அதற்கு பிறகு நேற்றுதான் அரிஷ், விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 2 மணி நேரமாக விசாரணை நடந்தது. இதில், வரதட்சணை கேட்டு சுமதியை சித்ரவதை செய்தது உறுதியானது. இதையடுத்து அரிஷை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவான மாமியார், மைத்துனர் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருமணமான 3 மாதத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: