நடிகையின் பாலியல் புகார் வழக்கு.. மன்னிப்புக் கோரிய மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சீமானுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!!

டெல்லி: நடிகையின் பாலியல் புகாரில் சீமான் மன்னிப்பு கேட்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீமான் இந்த வழக்கை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். உயர்நீதிமன்றம், இந்த புகாரை 12 வாரங்களுக்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சீமான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். கடந்த மார்ச் மாதம் உச்சநீதிமன்றம் இரு தரப்பும் பேசி முடிவுக்கு வர அறிவுறுத்தியது. அடுத்த விசாரணை நடக்கும் வரை, சீமானுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. ஆனால் சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் சமரசம் வேண்டாம், நீதி தான் வேண்டுமென விஜயலட்சுமி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சீமான் செப்டம்பர் 24ம் தேதிக்குள் மன்னிப்பு கோர வேண்டும். மன்னிப்பு கோரத் தவறினால், சீமானைக் கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும். வழக்கை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர். விஜயலட்சுமியுடன் சுமூகமாகச் செல்வதற்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: