ஊட்டி, டிச. 18: ஊட்டியில் உள்ள எச்ஏடிபி விளையாட்டு மைதானத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் கூடைப்பந்து, கைப்பந்து, கிரிக்கெட், டென்னிஸ் போன்றவற்றிற்கு தனித்தனி மைதானங்கள் உள்ளன. இதுதவிர கால்பந்து, ஹாக்கி உள்ளிட்டவைகள் விளையாட பெரிய புல்மைதானம் உள்ளது. இம்மைதானத்தில் தடகள ஓடுதளம், சிந்தெட்டிக் ஓடுதளமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. குளிர் பிரதேசம் என்பதால் ஆக்ஸிஜன் அளவு சற்று குறைவாக இருக்கும். இதுபோன்ற ஹை ஆல்டிடியூட் பயிற்சி மேற்கொள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வீரர், வீராங்கனைகள் இங்கு வந்து பயிற்சி மேற்கொண்டு செல்கின்றனர். இந்த சூழலில் கொரோனா ஊரடங்கு காரணமாக விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டன.