துறையூர் அருகே பச்சைமலை டாப்செங்காட்டுப்பட்டி தார் சாலையில் மெகா பள்ளங்கள்

துறையூர், டிச.17: துறையூர் அருகே பச்சைமலை டாப் செங்காட்டுப்பட்டியிலிருந்து சோபனபுரம் சோதனைச்சாவடி வரை உள்ள 14 கி.மீ. வனத்துறைக்கு சொந்தமான தார்சாலை மிகவும் பழுதடைந்து போக்குவரத்திற்கு அச்சுறுத்தும் வகையில் மிக மோசமாக உள்ளது. வாகன ஓட்டிகள் இந்த சாலையில் பயணிக்க முடியாத அளவிற்கு மெகா பள்ளங்கள் உள்ளன. இதனால் பீதியுடனே பாதையை கடந்து சென்று வருகின்றனர். மேலும் பூதக்கால், தண்ணீர்பள்ளம், கம்பூர், சோளமாத்தி போன்ற திருச்சி மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களுக்கும் வெங்கமுடி, சின்ன பக்களம், பெரிய பக்களம், மாயம்பாடி, நெசக்குளம், ஓடைக்காடு புதூர், மங்களம், நல்லமாத்தி போன்ற சேலம் மாவட்ட மலைக் கிராமங்களுக்கும் இந்த சாலை வழியாகவே இரண்டு மாவட்ட மக்களும் பயணம் செல்ல வேண்டும். அரசு பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் இயக்கி வரும் நிலையில் இந்த சாலையில் உள்ள மெகா பள்ளத்தில் மலை இறங்கி ஏறும்போது வாகன ஓட்டிகள் ஒருவித விபத்து பயம் ஏற்படுகிறது என கூறுகின்றனர்.

விவசாயிகள் அனைவரும் தங்களுக்கான இடுபொருட்களை வாங்குவதற்கும், விளைபொருட்களை விற்பனை செய்வதற்கும், இரு சக்கரவாகனங்களில் அதிக அளவு பயணித்து வருகின்றனர். தற்போது மங்களா அருவிக்கு சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து கண்டுகளித்து செல்கின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரே மலைவாழ் ஸ்தலம் பச்சைமலை மட்டுமே. கடந்த 2 ஆண்டுகளாக கலெக்டர், முதல்வர் தனிப்பிரிவு ஆகிய இடங்களில் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தும் இன்றளவிலும் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல் சாலை வசதியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. மலையில் இருக்கக்கூடிய மாணவர்கள் தங்கள் மேற்படிப்பிற்காக தினமும் நகரங்களை நோக்கி சென்று வருகிறார்கள். மழை மற்றும் இரவு நேரங்களில் இந்த சாலை சுத்தமாக வாகன ஓட்டிகளுக்கு தெரியாமல் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே வனத்துறைக்கு சொந்தமான மலைப்பாதையை புதிதாக அமைத்து கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும், வேண்டுகோளாகவும் உள்ளது.

Related Stories: