புதுடெல்லி: சீனாவுடன் நிலவி வரும் தீர்வு காணப்படாத எல்லைப்பிரச்னையானது இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கு மிகப்பெரிய சவாலாகும் என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் நடந்த நிகழ்ச்சியில் முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது நாட்டில் தேசிய பாதுகாப்பு சவால்கள் குறித்து அவர் விரிவாக எடுத்துரைத்தார். ‘‘சீனாவுடனான தீர்க்கப்படாத எல்லைப்பிரச்னையை மிகப்பெரிய சவாலாக நான் கருதுகிறேன்.
இரண்டாவது மிகப்பெரிய சவால், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் நடத்தும் மறைமுகப்போராகும். பாகிஸ்தானின் உத்தியானது வழக்கமான இடைவெளியில் இந்தியாவை மெதுவாக காயப்படுத்தி நாட்டில் தொடர்ந்து ரத்தம் சிந்துவதை தக்கவைப்பதாகும். இந்தியாவின் அண்டை நாடுகள் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார அமைதியின்மையை எதிர்கொள்ளும் விதத்தில் வெளிப்படும் பிராந்திய ஸ்திரமின்மை மூன்றாவது மிகப்பெரிய சவால். நான்காவது சவாலானது எதிர்காலத்தில் நாம் எந்த வகையான போரை எதிர்கொள்ள போகிறோம் என்பது தான். போர்கள் வேகமாக மாறி வருகின்றன.
எதிர்காலப் போர்கள் நிலம், வான் மற்றும் நீர் ஆகியவற்றுடன் மட்டுப்படுத்தப்படாது. இதில் விண்வெளி, சைபர் மற்றும் மின்காந்த களங்களும் அடங்கும். மாற்றங்களை செய்து அத்தகைய சூழ்நிலைக்கு நம்மை தயார்படுத்திக்கொள்வது நமக்கு சவாலாக இருக்கும். ஐந்தாவது சவால், நமது இரு எதிரிகளும் அணு ஆயுதங்களை கொண்டுள்ளனர். மேலும் நாம் எந்த வகையான வழக்கமான போரை நடத்துவோம். அவற்றை சமாளிப்பதற்கு எந்த வகையான செயல்பாட்டை தேர்வு செய்கிறோம் என்பது நமக்கு ஒரு சவாலாகவே இருக்கும். ஆறாவதாக, தொழில்நுட்பம் மற்றும் எதிர்காலப் போரில் அதன் தாக்கம் பற்றியதாகும்” என்று அனில் சவுகான் தெரிவித்தார்.
