பாதிரியார் கடத்தி சென்ற சிறுமி மீட்பு தலைமறைவான பாதிரியாருக்கு வலை ஜவ்வாதுமலையில் மாணவர்களுக்கு டியூஷன் நடத்தியவர்

போளூர், டிச.16: ஜவ்வாது மலையில் பாதிரியார் கடத்தி சென்ற சிறுமியை போலீசார் மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான பாதிரியாரை தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பகுதியை சேர்ந்தவர் பாதிரியார் ஜெயராஜ்(49). ஜவ்வாது மலை பெருங்காட்டூர் கிராமத்தில் தங்கி வந்த இவர் மாலை நேரத்தில் பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 24ம் தேதி அதே பகுதியை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியுடன் பாதிரியார் ஜெயராஜ் தலைமறைவானார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை, தனது மகளை பாதிரியார் ஜெயராஜ் கடத்தி சென்றுவிட்டதாக ஜமுனாமரத்தூர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, எஸ்பி அரவிந்த் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் அவர்களை தேடிவந்தனர். இதற்கிடையில், பாதிரியார் ஜெயராஜ் திருவண்ணாமலையில் உள்ள தனது அக்கா பரிமளா செல்வி என்பவரது, வீட்டில் சிறுமியுடன் சென்று தங்கியிருந்ததும், பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றதும் தெரியவந்தது.

இதையறிந்த போளூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையிலான போலீசார், சிறுமியை கடத்தி சென்ற வழக்கில் பாதிரியாருக்கு உடந்தையாக இருந்ததாக போக்சோ சட்டத்தில் பரிமளா செல்வியை கடந்த மாதம் 22ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சிறுமி கிடைக்காததால் பரிமளா செல்வியின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. தனது அக்காவிற்கு ஜாமீன் கிடைக்க வேண்டும் என்பதற்காக நேற்று முன்தினம் சிறுமியை ரகசியமாக ஊருக்கு அழைத்து வந்து விட்டுவிட்டு பாதிரியார் ஜெயராஜ் சென்றுள்ளார். தகவலறிந்த போளூர் போலீசார் சிறுமியை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி, ‘பாதிரியார் தன்னை கடத்தி செல்லவில்லை. பெங்களூருவில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்ப்பதற்காக அழைத்து சென்றார்’ என தெரிவித்துள்ளார். இருப்பினும், பாதிரியார் சொல்லி கொடுத்ததை சிறுமி சொல்வதாக போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், தலைமறைவாக உள்ள பாதிரியார் ஜெயராஜை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

Related Stories: