பட்டுக்கோட்டை வட்டாரத்தில் பசுந்தாள் உர பயிர் சாகுபடி வயல்களில் வேளாண் அதிகாரி ஆய்வு

பட்டுக்கோட்டை : தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த முதல்சேரி கிராமத்தில் பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்யப்பட்ட வயல்களை தஞ்சை மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் சாருமதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் அப்சரா, வேளாண்மை துணை இயக்குனர் சாருமதியிடம் விரிவாக எடுத்துக் கூறினார்.

விவசாயிகளை மண்புழு உரம் உற்பத்தி செய்து பயன்படுத்த ஊக்குவிப்பதன் மூலம் மண்ணில் உயிர்ம கரிம சத்தினை அதிகரித்து மண் வளத்தை மேம்படுத்துவதுடன், பண்ணை கழிவுகளை மறுசுழற்சி செய்வதன் மூலமும் பண்னை கழிவுகளை திறம்பட கையாள செய்வதன் மூலமும் விவசாயிகளின் உரச் செலவை குறைக்கலாம். பட்டுக்கோட்டை வேளாண்மை விரிவாக்க மையத்தில் வரப்பெற்ற மண்புழு உரப் படுக்கைகளையும் வேளாண்துறை துணை இயக்குனர் விவசாயிகளுக்கு விநியோகம் செய்தார்.

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து, மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பசுந்தாள் உர விதைகள், உயிர்ம வேளாண்மை மாதிரி பண்ணை திடல்கள், மண்புழு உர படுக்கைகள் மற்றும் வேப்ப மரக்கன்றுகள் விநியோகம் போன்ற திட்டக் கூறுகளை உள்ளடக்கியது.

இது குறித்து பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் பொறுப்பு அப்சரா கூறுகையில்; இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளை பசுந்தாள் உர பயிர்களை பயன்படுத்த ஊக்குவிப்பதன் மூலம் மண்ணில் உயிர்ம கரிம சத்து மற்றும் பயிர் மகசூல் அதிகரிக்கப்படுகிறது.

பட்டுக்கோட்டை வட்டாரத்திற்கு 10 மெட்ரிக் டன் தக்கைப்பூண்டு விதைகள் இலக்காக வழங்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மண் வளத்தை பேணிக் காக்கவும், மக்கள் நலம் காக்கவும் உயிர்ம வேளாண்மையை அடிப்படையாக கொண்டு பசுந்தாள் உர விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்றார். இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் அட்மா திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.

Related Stories: