திருவண்ணாமலை அரசு கல்லூரியில் வழிகாட்டி நிகழ்ச்சி உயர்கல்விக்கு அடித்தளம் அமைத்தவர் கலைஞர்

*துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பேச்சு

திருவண்ணாமலை : தமிழ்நாட்டில் உயர்கல்விக்கு அடித்தளம் அமைத்தவர் கலைஞர் என துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பேசினார்.திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், பள்ளிக் கல்வியை முடித்த மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கான உயர்வுக்கு படி வழிகாட்டி நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில், திருவண்ணாமலை, செங்கம், துரிஞ்சாபுரம், தண்டராம்பட்டு, புதுப்பாளையம் ஒன்றியங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமை தாங்கினார். டிஆர்ஓ ராம்பிரதீபன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு கல்லூரி சேர்க்கைக்கான ஆணையை வழங்கி துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பேசியதாவது:

தமிழ்நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் எண்ணற்ற தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் முதல்வர் எடுத்து வருகிறார். அதன்மூலம், லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 தேர்ச்சி பெற்றும், உயர்கல்வியில் சேர வாய்ப்பில்லாத மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கக் கூடாது என்பதற்காக நான் முதல்வன் திட்டத்தில் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படுகிறது.

அதன்மூலம், ஆலோசனைகள் மற்றும வழிகாட்டுதல்களை பெற்று மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்து பயன்பெறுகின்றனர். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழ்நாட்டு மாணவர்கள் உயர்கல்வியை பெறுகின்றனர். உயர்கல்வி பெறும் மாணவர்களின் சதவீதம், தேசிய சராசரியைவிட தமிழ்நாட்டில் அதிகம்.

தமிழ்நாட்டின் உயர்கல்விக்கு அடித்தளம் அமைத்தவர் கலைஞர். அவர் காலத்தில்தான், ஏராளமான கலைக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கினார்.

அதனால்தான், தமிழ்நாட்டில் உயர்கல்வி முடித்த இளைஞர்கள் உலகின் பல்வேறு நாடுகளிலும் உயர்ந்த பணியில் உள்ளனர். தமிழ்நாடு உயர் கல்வி கட்டமைப்பில் சிறப்பான இடத்தை பெற்றிருக்கிறது.

கல்வி மூலம்தான் நாம் அனைத்தையும் பெற முடியும். எனவே, தமிழ்நாடு அரசு ஏற்படுத்தரும் வாய்ப்புகளை பயன்படுத்தி மாணவர்கள் வாழ்வில் முன்னேற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், உதவி கலெக்டர் (பயிற்சி) அம்ருதா, மாவட்ட கல்வி அலுவலர் ஜோதிலட்சுமி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: