20 சதவீத இட ஒதுக்கீடு கோரி வி.ஏ.ஓ. அலுவலகங்களில் பா.ம.க.வினர் மனு

பொள்ளாச்சி, டிச.15:  பொள்ளாச்சியில் உள்ள அனைத்து வி.ஏ.ஓ. அலுவலகங்களிலும் நேற்று 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி பா.ம.க.வினர் மனு கொடுத்தனர். பொள்ளாச்சி தாலுகா பகுதிகளில் உள்ள அனைத்து வி.ஏ.ஓ. அலுவலகங்களிலும் மக்கள் குறைதீர் முகாம் நேற்று நடந்தது. இதில் இலவச வீட்டுமனை பட்டா,  முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன்கார்டு, பட்டா மாறுதல், அடிப்படை வசதி, திருமண உதவித்தொகை, குடிநீர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தொடர்பாக பலரும் மனு கொடுத்தனர். இதில், கோவை தெற்கு மாவட்ட பட்டாளி மக்கள் கட்சி மற்றும் வண்ணியர் சங்கம் இணைந்து வாணி ஆறுமுகம் தலைமையில், பல்வேறு வி.ஏ.ஓ. அலுவலகங்களில் கொடுத்த கோரிக்கை மனுவில், ‘‘தமிழகத்தில் மக்கள் தொகையில் வண்ணியர்கள் அதிகம் என்றாலும், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வண்ணியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டன.

 ஆனால், 108 சாதிகளுடன் சேர்த்து, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற பெயரில் வழங்கப்பட்டது. இதன் காரணமாக இட ஒதுக்கீட்டின் பயன்கள் வன்னியர்களுக்கு கிடைக்கவில்லை. எனவே வன்னியர் சங்கத்தினர் 40 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேறும் வகையில், உடனே அரசு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: