கதிஹார்: பீகாரில் மக்கானா விவசாயிகளின் பிரச்னைகளை பற்றி வாக்கு திருட்டு அரசு கவலைப்படவில்லை என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி, மக்கானா (தாமரை விதை) உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம் சமீபத்தில் கலந்துரையாடிய வீடியோவை தனது யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் இது குறித்து ராகுல் காந்தி கூறுகையில், ‘‘உலகில் மக்கானாவில் 90 சதவீதத்தை பீகார் விளைவிக்கிறது. ஆனால் வெயிலிலும், மழையிலும் இரவும் பகலும் உழைக்கும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் லாபத்தில் ஒரு சதவீதத்தை கூட ஈட்டுவதில்லை. விவசாயிகளை அவர்களின் வயலில் சந்தித்து அவர்களின் துயரங்களை அறிந்து கொண்டேன்.
இது பெரிய நகரங்களில் கிலோ ரூ.1000 முதல் ரூ.2000 வரை விற்கப்படுகின்றது. ஆனால் முழுத் தொழிலின் அடித்தளமாக இருக்கும் இந்த கடின உழைப்பாளிகளுக்கு ஒரு பெயரளவு விலை மட்டுமே கிடைக்கின்றது. இந்த விவசாயிகள், தொழிலாளர்கள் யார்? மிகவும் பின்தங்கிய தலித்- பகுஜன்கள். முழு கடின உழைப்பும் 99 சதவீதம் பகுஜன்களுடையது. ஆனால் அதன் முழு பலனானது ஒரு சதவீதம் உழைக்கும் இடைத்தரகர்களுக்கு மட்டுமே செல்கிறது. வாக்கு திருட்டு அரசு அவர்களை மதிக்கவோ அல்லது கவனிக்கவோ இல்லை. அவர்களுக்கு வருமானத்தையோ, நீதியையோ வழங்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
