2,668 அடி உயர மலையில் 11 நாட்கள் சுடர்விட்டது அண்ணாமலையார் கோயிலுக்கு கொண்டுவரப்பட்ட மகா தீப கொப்பரை ஆயிரங்கால் மண்டபத்தில் சிறப்பு பூஜை

திருவண்ணாமலை, டிச. 11: திருவண்ணாமலை மலை மீது ஏற்றப்பட்ட மகா தீபம் நிறைவடைந்ததை தொடர்ந்து, மலையில் இருந்து மகா தீப கொப்பரை நேற்று அண்ணாமலையார் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 10 நாள் உற்சவம் நடந்து முடிந்தது. விழாவின் நிறைவாக, கடந்த 29ம் தேதி 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. மலை மீது ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் காட்சியளிப்பது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் இரவு வரை மலை மீது மகா தீபம் காட்சியளித்தது. அதனை, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்நிலையில், மகா தீபம் நிறைவடைந்ததை தொடர்ந்து, தீபம் ஏற்றப்படும் கொப்பரையை நேற்று காலை மலையில் இருந்து அண்ணாமலையார் கோயிலுக்கு கை சுமையாக கொண்டு வந்தனர். அதைத்தொடர்ந்து, மாலை 6 மணியளவில், கோயில் 5ம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் மகா தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இந்நிலையில், மகா தீப கொப்பரையில் இருந்து பெறப்படும் தீபச்சுடர் பிரசாதம் (தீப மை), ஆருத்ரா தரிசனத்தின்போது நடராஜருக்கு அணிவிக்கப்படும். அதன்பிறகு, பக்தர்களுக்கு வழங்க கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

Related Stories: