ககன்யான்-ஜி1 டிசம்பரில் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

பெங்களூரு: இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘கடந்த நான்கு மாதங்களில் இந்த துறையில் பல சாதனைகள் செய்யப்பட்டுள்ளன. முதல் ஆளில்லா விண்கலம் ஜி1 இந்த ஆண்டு இறுதியில், அநேகமாக டிசம்பரில் ஏவப்படும். பாதி மனிதனை போல தோற்றமளிக்கும் வயோமித்ராவும் அதில் பறப்பார். இந்த திட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் நாங்கள் வேகமாக செயல்பட்டு வருகிறோம். இந்த திட்டத்தின் 80 சதவீத பணிகளை நாங்கள் முடித்துவிட்டோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள், பணியில் 20 சதவீதம் நிறைவடையும்.

கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாகவும் உள்ளது. கடந்த 2015 முதல் 2025 வரை முடிக்கப்பட்ட செயல்பாடுகளின் எண்ணிக்கை கடந்த 2005 முதல் 2015 வரை முடிக்கப்பட்ட செயல்பாடுகளின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாகும். கடந்த 6 மாதங்களில் மூன்று முக்கிய விண்வெளி செயல்திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. ஆக்ஸியம்-4 பயணமானது ஒரு மதிப்புமிக்க ஒன்றாகும். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்ட முதல் இந்தியர் சுபான்ஷு சுக்லா என்பது நமக்கு பெருமை என்றார்.

Related Stories: