தமிழக அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் அனைவரையும் பணி நிலைப்பு செய்ய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: தமிழக அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் அனைவரையும் பணி நிலைப்பு செய்ய வேண்டும் என அன்புமணி வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரப்பிரதேச உயர்கல்வி சேவைகள் ஆணையத்தில் 1989 முதல் 1992 வரை தினக்கூலி ஊழியர்களாக பணியில் சேர்ந்த மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை பணியாளர்கள் 6 பேர் பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றியும் அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க அம்மாநில அரசு மறுத்து விட்டது. அவர்களில் சிலர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியும் கூட அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்படவில்லை. அதை எதிர்த்து தொடரப்பட்டிருந்த வழக்குகளின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கும் கண்டனமும், அறிவுரைகளும் தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநிறுத்தக் கூடியவை.

பணியாளர்களின் உழைப்பை ஒன்றிய, மாநில அரசுகள் சுரண்டக் கூடாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள்,‘‘வேலை வழங்கும் விஷயத்தில் அரசுகள் வெறும் சந்தைப் பங்கேற்பாளர்கள் அல்ல; மாறாக, அவை அரசியல் சட்டப்படியான வேலை வழங்கும் அமைப்புகள். அரசு அலுவலகங்களில் அடிப்படையான பணிகளை தொடர்ந்து செய்யும் அவர்களின் முதுகில் அரசின் நிதிப்பற்றாக்குறை என்ற சுமையை சுமத்தக்கூடாது. தற்காலிக பணியாளர்கள் என்ற அடிப்படையில் பணிக்கு சேர்த்து விட்டு, அவர்களிடமிருந்து நிரந்தரமான ஊழியர்களுக்கான வேலைகளை காலம் காலமாக பிழிந்தெடுப்பது பொது நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையை சிதைப்பதுடன், அனைவருக்கும் சமமான பாதுகாப்பு என்ற அரசியலமைப்புச் சட்ட உத்தரவாதத்தையும் பாதிக்கிறது’’என்றும் அறிவுறுத்தினர்.

அந்த பணியாளர்கள் அனைவரையும் 2002-ஆம் ஆண்டு முதல் பணி நிலைப்பு செய்து, அதன் அடிப்படையில் அவர்களுக்கு வழங்க வேண்டிய உரிமைகளை வழங்கவும் நீதிபதிகள் ஆணையிட்டனர். அரசு வேலைவாய்ப்புகளை வழங்குவதில் இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 14, 16, 21 ஆகியவற்றின் அடிப்படையில் அனைவருக்கும் சம உரிமை, வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பு, வாழும் உரிமை மற்றும் தனிநபர் சுதந்திரம் ஆகியவை வழங்கப்பட வேண்டும் என்பது தான் இந்தத் தீர்ப்பின் நோக்கமாகும்.

தமிழகத்தில் உள்ள அரசு கலை – அறிவியல் கல்லூரிகளில் 7500க்கும் கூடுதலான கவுரவ விரிவுரையாளர்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்து வருகின்றனர்; அரசு பள்ளிகளில் சுமார் 14,000 சிறப்பாசிரியர்கள் 13 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதி நேரமாக பணி செய்து வருகின்றனர். மேலும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் பல்வெறு அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணி செய்து வருகின்றனர். எனவே, தமிழக அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் அனைவரையும் பணி நிலைப்பு செய்வதுடன், அவர்கள் பணியில் சேர்ந்த நாளில் இருந்து அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: