புதிதாக விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக பயிர் கடன்

ஊட்டி, ஆக.22: புதிய பயிர் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு விரைந்து வழங்கி வேண்டும் என தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள் ஆய்வு கூட்டத்தில் இணை பதிவாளர் அறிவுறுத்தி உள்ளார்.  நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் மற்றும் செயலாட்சியர்கள் ஆய்வு கூட்டம் ஊட்டியில் நேற்று நடந்தது.

கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் தயாளன் தலைமை வகித்து பேசுகையில், ‘நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள் தங்கள் சங்கத்தில் உர விற்பனை மேற்கொள்ள வேண்டும். புதிய பயிர் கடன் கேட்டு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு விரைந்து புதிய பயிர் கடன் வழங்க வேண்டும், என்றார். தொடர்ந்து பல்வேறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உதவி செயலாளராக பணியாற்றிய 7 பேருக்கு செயலாளராக பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்பட்டன.

செறுமுள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உதவி செயலாளர் மேத்யூ ஜான் கூடலூர் கூட்டுறவு கடன் சங்கத்திற்கும், அரவேனு கூட்டுறவு கடன் சங்க உதவி செயலாளர் மணி ஹெத்தையம்மன் கூட்டுறவு கடன் சங்கத்திற்கும் செயலாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இக்கூட்டத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சித்ரா, கூட்டுறவு சார் பதிவாளர்கள், மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள், மற்றும் கூட்டுறவு சங்க செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: