மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் ஆளுநர் விருப்பப்படிதான் இயங்க வேண்டுமா? உச்ச நீதிமன்றம் காட்டம்

புதுடெல்லி: மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு கால நிர்ணயம் விதித்தது தொடர்பான விவகாரத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான வழக்கின் விசாரணை இரண்டாவது நாளாக உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நேற்று இரண்டாவது நாளாக விசாரணைக்கு வந்தது. ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதங்களை முன் வைத்தார்.

அதில், ‘‘ஆளுநருக்கு என்று அரசியல் சாசன அமைப்பில் சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. அந்த அதிகாரத்தின் அடிப்படையில் அவர் முடிவை மேற்கொள்ளலாம். விருப்புரிமையின் பேரில் ஆளுநர் இருக்க வேண்டும். அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் ஆளுநர்கள் முடிவுகளை எடுக்க அனைத்து அதிகாரமும் உள்ளது. மேலும் குடியரசுத் தலைவருக்கு மசோதாக்களை அனுப்பி வைக்கவும் அவருக்கு உரிமை உள்ளது. ஏற்றுக்கொள்ள முடியாத சில விவகாரங்களை தவிர, பிற விவகாரங்களில் மட்டுமே அமைச்சரவையின் முடிவுகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் ஆவார். ஒரு மசோதா திருப்பி அனுப்பப்பட்டால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கலாம், அல்லது வழங்காமலும் இருக்கலாம் அல்லது நிறுத்தியும் வைக்கலாம் அல்லது மசோதாவை மறுபரிசீலனை செய்யலாம். இவ்வாறு அரசியல் அமைப்பில் ஆளுநருக்கு என்று சில அதிகாரங்கள் வகுக்கப்பட்டுள்ளன. ஆளுநர் என்பவர் ஒரு தபால்காரர் கிடையாது என்பதை மாநில அரசுகள் நினைவில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ‘‘சட்டப்பேரவையால் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டு முதல் முறையாக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு அது மீண்டும் சட்டப்பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டால், அதனை அமைச்சர்கள் மற்றும் அரசு பரிசீலனை செய்து இரண்டாவது முறையாக மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கும் பட்சத்தில் அதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்குவதை தவிர, வேறு வழியே இல்லை. மசோதாக்கள் மீது முடிவு எடுப்பது, நிறுத்தி வைப்பது குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது இதில் உள்ள காலதாமதமே முக்கிய பிரச்னையாக கருதப்படும். மேலும் ஒரு மசோதா நிறுத்தி வைக்கப்பட்டால் மசோதா செயல்பாடு இழந்துவிட்டது என்று பொருள் என்று ஏற்க முடியாது. ஏனெனில் அந்த அர்த்தம் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு ஆளுநரின் விருப்பப்படி தான் செயல்பட வேண்டும் என்பதா? என்று காட்டமாக கேள்வி எழுப்பினர்.

நீதிபதிகள் மேலும் கூறுகையில், ‘‘அரசியல் சாசன சட்டம் சரியாகத்தான் உள்ளது. அதனை செயல்படுத்துவதில் தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மசோதாவுக்கு ஒப்புதல் கொடுக்க தாமதப்படுத்தினால், அதற்கான காரணங்களை நீங்கள் கூறியிருக்க வேண்டும். அதைவிடுத்து அந்த மசோதா அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கூறி நிறுத்தி வைக்கிறீர்கள். அதனை ஏற்க முடியாது.ஆளுநர் ஒரு மசோதாவை நிரந்தரமாக கிடப்பில் போட முடியும் என்று எந்த தீர்ப்பிலும் இல்லை. இந்நிலையில், இருக்கும் போது ஏன் ஆங்கிலேயர்கள் கால அரசு சட்ட நடைமுறைக்கு நாம் செல்ல வேண்டும் என்று தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்தனர்.

* ஆபரேஷன் சக்சஸ், பேஷண்ட் டெட்டா? ஒன்றிய அரசை கிண்டலடித்த நீதிபதிகள்
சட்டப்பேரவை அமைச்சரவை முடிவின் அடிப்படையில் மசோதாக்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் அதற்கு நீங்கள் மனது வைத்தால் மட்டுமே ஒப்புதல் வழங்குவீர்கள். இல்லையென்றால் கிடப்பில் போட்டு வைத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பீர்கள். உங்களது இந்த நடவடிக்கை மற்றும் முடிவுகள் எடுக்கும் விதம் என்பது ‘‘ஆபரேஷன் சக்சஸ்- ஆனால் பேஷண்ட் டெட்” என்பது போல் உள்ளது என்று ஒன்றிய அரசை நீதிபதிகள் கிண்டலாக சாடினர்.

* ஆங்கிலேயர் கால சட்டத்தை குறிப்பிட்ட ஒன்றிய அரசு
துஷார் மேத்தா வாதாடுகையில், ‘‘ஆளுநர் ஒன்றிய அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர். மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படாதவர் என்பதால், மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை விட எந்த வகையிலும் ஆளுநர் குறைவானவர் கிடையாது. அரசியலமைப்பின் உயர்ந்த பதவியான குடியரசுத் தலைவர், அதேபோன்று ஆளுநர் ஆகியோரிடம் உள்ள முழுமையான அரசியலமைப்பு அதிகாரத்தை தகர்க்கும் வகையில் ஒரு விளக்கத்தை நாம் கொடுக்க வேண்டாம். இந்த விவகாரத்தில் ஞானத்தை பயன்படுத்த வேண்டும். மேலும் தமிழ்நாடு ஆளுநர் வழக்கில் அரசியல் சாசன பிரிவு 200ஐ இந்த நீதிமன்றம் விளக்கியது சரியானது ஒன்று கிடையாது. 1935ம் ஆண்டின் இந்திய அரசு சட்டத்தின் படி மசோதாவை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் உண்டு’’ என்று தெரிவித்தார்.

Related Stories: