ஜனநாயகத்தை, ஆட்சியாளர்களை அச்சுறுத்தவே மசோதாக்களை கடைசி நேரத்தில் நிறைவேற்ற ஒன்றிய அரசு துடிக்கிறது: கனிமொழி எம்பி குற்றச்சாட்டு

சென்னை: ஒன்றிய அரசு சில முக்கியமான மசோதாக்களை கடைசி நேரத்தில் கொண்டு வந்து, நாட்டின் ஜனநாயகத்தை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆட்சிகளை அச்சுறுத்துவதுவதற்காகவே நிறைவேற்ற துடிக்கிறது என்று கனிமொழி எம்பி குற்றம் சாட்டினார். பாராளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி எம்பி நேற்று மாலை டெல்லியில் இருந்து, ஏர் இந்தியா பயணிகள் விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: பிரதமரில் இருந்து, முதலமைச்சர், அமைச்சர்கள், குற்ற வழக்குகளில் சிக்கி, 30 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டால் பதவி நீக்கம் செய்யப்படும் மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சில முக்கியமான மசோதாக்களை ஒன்றிய பாஜ அரசாங்கம், இறுதி நாள் வரையில் காத்திருந்து, கொண்டு வருவதை வழக்கமாக கொண்டு உள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு அதை படிக்க கூட நேரம் அவகாசம் இல்லை. ஒவ்வொரு முறையும், இதேபோல் தான் செய்கின்றனர்.

பாஜ அரசு தொடர்ந்து நாட்டின் ஜனநாயகத்தை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆட்சிகளை அச்சுறுத்துவதற்காகவே பல மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற துடித்துக்கொண்டு இருக்கிறது என்பது மிகத் தெளிவாக தெரிகிறது. ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு என்ற பிரசாரம் ஆட்சியில் இருக்கக்கூடிய ஒன்றிய அரசு, அதோடு பல மாநிலங்களில் ஆட்சியில் உள்ள அரசுகள் நாங்கள் தேர்ந்தெடுத்த ஆட்சியா அல்லது ஒன்றிய அரசும், தேர்தல் ஆணையமும் இணைந்து உருவாக்கிய ஆட்சியா என்ற ஒரு மிகப்பெரிய கேள்வியை மக்கள் மனதில் விதைத்துள்ளது.

ராகுல் காந்தி பல தரவுகளை தந்துதான் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். ராகுல் காந்தியோ, எதிர்க்கட்சிகளோ குற்றச்சாட்டுகளை கூறும்போது, தரவுகளோடு இருக்கக்கூடிய காட்சிகளோடுதான் எடுத்துச் சொல்கின்றனர். ஆனால், அதற்கு எந்த பதிலையும், நாடாளுமன்றத்திலே ஆட்சியாளர்கள் கூறவில்லை. இது குறித்து ஒரு விவாதம் நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பியும், ஒவ்வொரு நாளும் போராட்டத்தில் ஈடுபடக்கூடிய ஒரு நிலைக்கு தள்ளப்படப்பட்ட நிலையில், இதுவரையில், நாளை நாடாளுமன்றம் முடியக்கூடிய சூழ்நிலையில், ஒன்றிய அரசு அதை ஏற்றுக் கொள்ளாத ஒரு நிலையைதான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு கனிமொழி எம்பி கூறினார்.

Related Stories: