மனைவியின் கள்ளக்காதலனை கூலிப்படை ஏவி கொன்ற கணவர்: 5 பேர் கைது

மரக்காணம்: திண்டிவனம் அருகே முருங்கப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரஹமதுல்லா (26), கார் விற்பனை புரோக்கர். இவரது மனைவி சஹானா (24). கடந்த சில மாதங்களாக கூனிமேடு கிராமத்தில் வாடகை வீடு எடுத்து மனைவி, 2 குழந்தைகளுடன் குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் சஹானாவுக்கும் அப்பகுதியை சேர்ந்த பெயின்டர் சாதிக் பாஷாவுக்கும் (25) கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இது தெரிந்து ரஹமதுல்லா, சாதிக் பாஷாவை எச்சரித்துள்ளார். ஆனால் சஹானாவுடன் இருந்த கள்ளத்தொடர்பை அவர் கைவிடவில்லை.

இதையடுத்து ஊர் முக்கியஸ்தர்கள், 2 மாதத்திற்கு முன்பு சாதிக் பாஷாவை அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர். இதையடுத்து வாடகை வீட்டை காலிசெய்து, சொந்த ஊரான திண்டிவனம் முருங்கப்பாக்கத்துக்கு மனைவியுடன் சென்றுள்ளார். இருப்பினும் செல்போன் மூலம் அடிக்கடி சஹானாவுடன் தொடர்பு கொள்ள சாதிக் பாஷா முயன்றதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரஹமதுல்லா அவரை தீர்த்துக் கட்ட முடிவெடுத்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டை ஒட்டியுள்ள கடற்கரையோர பகுதியில் சாதிக் பாஷா மது அருந்தியுள்ளார். அங்கு ரஹமதுல்லா, கூலிப்படை கும்பலுடன் சென்றுள்ளார். அவர்கள் சாதிக்பாஷா தலையில் கத்தியால் சரமாரி வெட்டினர். இதில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து மரக்காணம் போலீசார் வழக்குபதிந்து சாதிக் பாஷாவை கைது செய்தனர். அவரது தகவலின்பேரில் கூலிப்படையை சேர்ந்த புதுச்சேரி பாரதிதாசன் (28), ஆனந்தராஜ் (21), குணசேகரன் (22), செல்வகுமார் (23) ஆகியோரை அதிரடியாக நேற்று மாலை கைது செய்தனர்.

Related Stories: