கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்புக்கு தமிழ்நாடு அரசு அனுமதி: 2,442 கோடி ரூபாய் முதற்கட்ட பணிகளுக்கு ஒதுக்கீடு அரசாணை வெளியீடு

சென்னை: கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் பணிகளை மேற்கொள்ள ரூ.2,442 கோடி நிர்வாக அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னையில் தற்போது இயக்கப்படும் மெட்ரோ ரயில் தடத்துடன், புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், கோயம்பேடு – ஆவடி – பட்டாபிராம் வழித்தடத்தில் பயணிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. கோயம்பேட்டில் தொடங்கி, பாடி புதுநகர், முகப்பேர், அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி வழியாக பட்டாபிராம் வெளிவட்ட சாலையை இணைக்கும் வகையில், திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

அம்பத்தூர் எஸ்டேட், ஆவடி ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது. அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து பணிமனை சந்திப்பு, டன்லப் அருகே, ஆவடி பேருந்து நிலையத்துக்கு முன்பு என மூன்று இடங்களில் நெடுஞ்சாலை மேம்பாலத்துடன் ஒருங்கிணைந்து கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 21.76 கி.மீ. தூரம் கொண்டுள்ள இந்த தடத்தில், கோயம்பேடு, பாடி புதுநகர், பார்க் சாலை, கோல்டன் பிளாட் சந்திப்பு, வாவின் முதல் பிரதான சாலை, அம்பத்தூர் எஸ்டேட், அம்பத்தூர் டெலிபோன் எக்சேஞ், டன்லப், அம்பத்தூர், அம்பத்தூர் ஓ.டி., ஸ்டெட்போர்டு மருத்துவமனை, திருமுல்லைவாயல், வைஷ்ணவி நகர், முருகப்பா பாலிடெக்னிக், ஆவடி ரயில் நிலையம், கஸ்தூரிபா நகர், இந்து கல்லூரி, பட்டாபிராம், வெளிவட்ட சாலை ஆகிய 19 இடங்களில் மேம்பால ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.

மொத்தம் ரூ.9,744 கோடியில் இந்த திட்டத்தை செயல்படுத்த மதிப்பீடு தயாரிக்கப்பட்டிருந்தது. இதற்கு, மாநில மற்றும் ஒன்றிய அரசிடம் ஒப்புதல் பெற்று, அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து, கடந்த மே 2ம் தேதி இந்த புதிய வழித்தட திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பு நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை: கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை வெளிவட்ட சாலை வழியாக மெட்ரோ ரயில் நீட்டிப்பு முதற்கட்ட பணிகளான வழித்தட வசதிகள், வரைபடம், போக்குவரத்து மாற்றும் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை 21.76 கிலோ மீட்டர் நீளம் மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முற்கட்டமாக ரூ.2,442 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு துணை கடனாக வழங்கப்படும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: