மத மோதலை உருவாக்கும் வகையில் பேச்சு வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஆதீனம் மனு: காவல்துறை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தருமபுரம் ஆதீனம் ஏற்பாட்டில் சென்னை காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற சைவ சிந்தாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த மே 2ம் தேதி மதுரை ஆதீனம் காரில் வந்து கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டை – சேலம் ரவுண்டானா பகுதியில் மதுரை ஆதீனத்தின் கார் மீது மற்றொரு கார் மோதி விட்டு நிற்காமல் சென்றாக மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம், தன்னை கொலை செய்ய சதி நடந்துள்ளது. இதில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருக்கலாம். காரில் வந்தவர்கள் குல்லா அணிந்தருந்தனர் என்று கூறியிருந்தார்.

இது குறித்து விசாரணை செய்த கள்ளக்குறிச்சி போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அதிவேகமாக காரை ஓட்டி சென்ற ஆதீனத்தின் கார் ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்து ஏற்பட காரணம் என தெரியவந்தது. இந்த விபத்து குறித்து ஆதீனமோ அவரது ஆதரவாளர்களோ காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. மேலும், சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த முபாரக் என்பவரின் கார் மீது, அதிவேகமாக சென்ற ஆதீனத்தின் கார் தான் மோதியது என்பதையும் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், மதுரை ஆதீனத்தின் பேச்சு மத மோதலைஉருவாக்கும் வகையில் இருப்பதாக கூறி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், சமூகத்துக்கு இடையே மோதலை உண்டாக்கும் வகையில் பேசுதல், பொது அமைதிக்கு கேடு விளைவிக்கும் வகையில் பேசுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் பெற்றார் மதுரை ஆதீனம். இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி ஆதீனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மதுரை ஆதீனத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது. ஆதீனத்தின் மனுவுக்கு செப்டம்பர் 15ம் தேதி காவல்துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Stories: